மழைக்காலத்தில் நெல் பயிர்களைத் தாக்கும் நோய்களில் இருந்து எவ்வாறு காப்பது…

 |  First Published Oct 18, 2016, 4:35 AM IST



 

பருவநிலை மாற்றத்தால் மழைக் காலத்தில் பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கண்டறிந்து முறையான பராமரிப்பு மேற்கொண்டால் பயிர்களைப் பாதுகாக்கலாம்.
நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நெல் பயிர்கள் 30 முதல் 45 நாள்கள் வளர்ச்சி பெற்ற நிலையில் உள்ளன. 
தொடர்ந்து விட்டு, விட்டு பெய்த மழையினாலும், சிதோஷண நிலை மாற்றத்தாலும் பூச்சி, நோய்த் தாக்குதல்களில் பயிர் சேதமடையும்.
மேலும் நெல் பயிரை இலைச் சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சி, பாக்டீரியாவினால் ஏற்படும் இலை கருகல் நோய் போன்றவை அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன.
இதையொட்டி விவசாயிகள் இந்தப் பருவத்தில் தங்களது பயிர்களை கவனமாக கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இதுகுறித்து பூந்தமல்லி வட்டார வேளாண் உதவி இயக்குநர் உமாதேவி கூறியது:
நெல் பயிர்களுக்கு இந்தப் பருவத்தில் பூச்சியின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.
உதாரணமாக, இலைச் சுருட்டுப் புழுக்கள் மெல்லிய இழை கொண்டு இலைகளை மடித்து இலையின் உள்ளே சென்று பச்சையத்தை சுரண்டி சாப்பிடுவதால் இலைகள் வெண்ணிறமாக மாறிவிடும்.
இதன் தாக்குதல் வழக்கமாகும்போது பயிரின் வளர்ச்சிக் குன்றி மகசூல் குறைந்து விடும். இதேபோல், இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதலும் இந்தப் பருவத்தில் அதிகரிக்கும்.
இவை ஆண் அந்துப் பூச்சி இனம் மஞ்சள் நிறத்தில் முன் இறக்கையில் கரும்புள்ளி காணப்படும். பெண் அந்துப்பூச்சி இலையின் மேற்பாகத்தில் முட்டையிட்டு முட்டை குவியல்களை வெண்ணிறப் பஞ்சியால் மூடிவிடும்.
முட்டையிலிருந்து வெளிவரும் இளம் பூச்சிகள் இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும். வளர்ந்த புழுக்கள் தண்டின் அடிபாகத்தில் சிறு துவாரமிட்டு தண்டின் உள்ளே சென்று சதைப் பகுதியைத் தின்றுச் சேதப்படுத்தும்.
மேலும், புழுக்கள், அதன் கழிவுகள் உள்ளே காணப்படும். இதன் தாக்குதலால் இளம் பயிரின் நடுக் குருத்து காய்ந்து விடும்.
தண்டு வளரும் பருவத்தில் அதாவது கதிர் உருவாகும் பருவத்தில் தாக்குவதால் வெளிவரும் கதிர்கள் வெண்கதிர்களாக மாறிவிடும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
எனவே இதுபோன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். முட்டை குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
முட்டை ஒட்டுண்ணியை ட்ரைகோலிராமா ஜப்பானிக்கம் இட்டுத் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், பூச்சியின் தாக்குதல் அதிகமாகும்போது குளோரிபை ரீபாஸ் 20 (500 மில்லி லிட்டர் அளவு) அல்லது ட்ரையசோபாஸ் 40 (250 மில்லி லிட்டர் அளவு) ஆகிய மருந்துகளில் ஏதாவது ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு காலை, மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய்: பாக்டீரியா இலைக் கருகல் நோய் என்பது காற்று, மழை நீரால் இலைகள் ஒன்றோடு ஒன்று, உராய்வதன் மூலம் பரவுகிறது.
நெல் பயிரின் இலைகளின் ஓரங்கள், நடு நரம்புப் பகுதியில் இருப் புள்ளிகள் தோன்றி, பிறகு அதிகப் பெரியதாக மாறி இலைக் கோடுகளை ஏற்படுத்தும்.
பின்பு இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும். இவற்றை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் எடுத்துக் கொண்டு இதனுடன் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ரா சைக்கிளின் சல்பேட் ஒரு ஏக்கருக்கு 120 கிராம் சேர்த்து தெளித்து இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.
இதேபோல் பருவத்துக்கேற்ப பூச்சித் தாக்குதலைக் கண்டறிந்து முறையாகப் பராமரிப்பதன் மூலம் விவசாயிகள் முழுமையாகப் பயனடையலாம் என்றார்.

Tap to resize

Latest Videos

click me!