கால்நடை விவசாயிகளுக்கு உதவும் தீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்…

 |  First Published Oct 18, 2016, 4:33 AM IST



 

கால்நடை விவசாயிகள் லாபகரமான வகையில் பால் உற்பத்தி செய்யும் வகையில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது கால்நடைகளின் பசுந்தீவனத் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. எனவே தீவனப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் கடந்த 3 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கால்நடைத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
அரசுத் திட்டங்கள் பின்வருமாறு (திட்டத்தின் இனங்களும், அதைப் பெறுவதற்கான தகுதிகளும், நிபந்தனைகளும்): 
அதிக மகசூல் தரக் கூடிய தீவனப்பயிர் சாகுபடி (இறவையில் 0.25 ஏக்கர் பரப்பில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் சாகுபடிக்கு ரூ.2 ஆயிரம் மானியம்):
கால்நடை வளர்ப்பவராக இருந்து குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் பரப்பில் இறவையில் 3 ஆண்டுகளுக்கு தீவனப் பயிர் சாகுபடி செய்ய பாசன வசதி உள்ளவராக இருத்தல் வேண்டும். குத்தகைதாரராக இருந்தால் குத்தகை காலம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக இருப்பின் மேற்கண்டவாறு இறவையில் தீவனப்பயிர் வளர்ப்பவராக இருத்தல் வேண்டும்.
அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளுக்கு நிலம் இருந்து 3 ஆண்டுகள் தீவனப் பயிர் சாகுபடி செய்து பராமரிப்பு செய்பவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட தகுதி உள்ள சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தீவனச் சோளம், தட்டைப் பயறு சாகுபடி (மானாவாரியில் 0.25 ஏக்கர் பரப்பில் தீவனச் சோளம், தட்டைப் பயறு சாகுபடிக்கு விதைகள் மானியம்): 
மானாவாரியில் தீவனப் பயிர்களான சோளம், தட்டைப் பயறு வளர்க்க முன்வர வேண்டும். அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
பல்லாண்டு தீவனப் பயிருக்கு தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் வழங்குதல் (விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்து 750 மானியம்): 
குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் குறையாமல் பல ஆண்டு தீவனப் பயிர் சாகுபடி செய்பவராகவும், நல்ல நீர் ஆதாரம் உள்ள ஆழ்குழாய் கிணறு, திறந்தவெளி கிணறு உள்ளவராக இருத்தல் வேண்டும். வேறு எந்த அரசுத் திட்டத்தின் கீழ் இந்த மாதிரியான இனங்களில் பயன் பெறாதவராக இருத்தல் வேண்டும். அதிக மகசூல் தரக் கூடிய தீவனப்பயிர் சாகுபடி இனத்தில் குறைந்தபட்சம் இறவையில் 1 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்து பயன்பெற்று இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
அகத்தி மர வகை தீவன பயிர் சாகுபடி (அகத்தி விதைகள் 100 சதவீதம் மானியம்): 
கால்நடை வளர்ப்பவராக இருந்து அகத்தி வளர்க்க முன்வருபவர்கள். அதிக மகசூல் தரக் கூடிய தீவனப் பயிர் சாகுபடி திட்டத்தில் பயன்பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
அசோலா சாகுபடி (ரூ.1,600 மானியம்):
கால்நடை வளர்ப்பவராக இருந்து, இதற்கு முன் இது மாதிரியான திட்டத்தில் பயன் பெயறாதவராக இருக்க வேண்டும். அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Latest Videos

click me!