குறுத்துப் பூச்சியை ஒழிக்கும் நடவடிக்கைகள்…

 |  First Published Oct 18, 2016, 4:36 AM IST



நெல் பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சியை ஒழிக்க அவசர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீள முடியும் என திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தினர் தெரிவித்தனர்.
இப்பருவத்தில் நெல் பயிரில் குருத்துப் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும் எனவும், அதில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களைப் பாதுகாத்து நஷ்டமடையாமல் இருக்கவும் உதவிப் பேராசிரியர் சுமதி யோசனைகள் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: தற்போதுள்ள பருவத்தில், நெல் பயிரில் பரவலாக குருத்துப் பூச்சியின் தாக்குதல் இருக்கும். இத் தாக்குதலால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். 
இந்த பூச்சித் தாக்குதலின் போது புழுக்கள் இளம் பயிரின் தண்டில் துளையிட்டு உள்ளே சென்று அடிபாகத்தில் இருந்து உள்பகுதியை கடித்து உண்பதால் இளம் பயிரின் நடுக் குருத்து வாடி காய்ந்து விடும்.
பூக்கும் பருவத்தில் கதிர் காய்ந்து மணி பிடிக்காமல் வெண்ணிறக் கதிர்களாக மாறும். வாடியக் குருத்து அல்லது வெண் கதிரைப் பிடித்து இழுத்தால் பயிர் எளிதில் கையில் வந்து விடும்.
ஒரு சதுர மீட்டருக்கு 2 மூட்டை நெல் வரும். அதில் 12 சதவீதம் நஷ்டம் ஏற்படும்.

குருத்துப் பூச்சியை ஒழிக்க மேலாண்மை முறைகள்: அறுவடை செய்த பின் தாள்களை மடக்கி உழுவதன் மூலம் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் அழிக்கலாம்.
நடவு நடுவதற்கு முன் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி முட்டைக் குவியல்களை அழிக்க வேண்டும். மண் பரிசோதனைப் படி தழைச் சத்து உரத்தை இட வேண்டும். மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை விளக்குப் பொறி அமைக்க வேண்டும்.
பூச்சித் தாக்குதலையும் மீறி வளரக் கூடிய டிகேஎம் 6, ஐ.ஆர்.8, 20, 26, 36, 40 ஆகிய நெல் ரகங்களைப் பயிரிடலாம்.
ஒரு ஹெக்டேருக்கு 12 இனக் கவர்ச்சிப் பொறியும், ஒரு ஹெக்டேருக்கு 5 என்ற அளவில் டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை அமைக்கலாம்.

பூச்சித் தாக்குதலில் பொருளாதார சேத நிலை அடையும்போது: ஒரு ஹெக்டேருக்கு புரபனோபாஸ் 1000 மில்லி லிட்டரும், பாஸ்போமிடான் 1250 மில்லி லிட்டரும், புளுபென்டிமைட் 50 மில்லி லிட்டரும், கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 15 கிலோ ஆகியவற்றை இடவேண்டும்.
நெல் ஆராய்ச்சி மையத்தின் மேற்கண்ட நடைமுறைகளை உரிய முறையில் மேற்கொண்டால் நஷ்டத்தில் இருந்து மீண்டு வரலாம் என நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் அகிலாவின் அறிவுரைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என உதவிப் பேராசிரியர் சுமதி கேட்டுக் கொண்டார்.

click me!