ஒவ்வொரு ‘மா’ சாகுபடியாளரும் தனது மா மரங்களை கண்காணித்து மகசூல் அதிகம் பெற பல தொழில் நுட்பங்கள் உள்ளன.
அதில் பழங்களின் உற்பத்தியை அதிகரித்திட மண் வளம் பேணுதல், கவாத்து, ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, ஊடுபயிர் சாகுபடி, பரிந்துரைபடி உரம் பயன்பாடு மற்றும் அறுவடை பின்நேர்த்தி உத்திகள் குறிப்பிடத்தக்கவை.
மா மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மரங்களைப் பூக்கச் செய்திட பயிர் ஊக்கி பயன்படுத்தலாம். செனிக்கா கெமிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த பயிர் ஊக்கி தான் ‘கல்டார்’ எனும் பேக்குளோப்யூட்ரசால் 23 சதவீதம் W/W எனும் இரசாயன பொருள் ஆகும்.
5 வயதுக்கு மேற்பட்ட மா மரங்களில் கல்டார் அளித்தபோது நல்ல பலன் ஆராய்ச்சியின் மூலம் பெறப்பட்டது. மா மரங்களின் தழை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி பூக்கள் அதிக அளவு பூக்கச் செய்யலாம்.
மேலும் கல்டார் பயன்படுத்துவதால் பழங்களின் தரம் மேம்படுகிறது. குறிப்பாக பழத்தின் அளவு, நிறம் மற்றும் சேமித்து வைக்கும் திறன் அதிகப்படுத்துகின்றது. சுத்தமான தண்ணீரில் தான் கல்டார் கரைத்து ஒரு மரத்துக்கு 1.5 லிட்டர் பயன்படுத்த வேண்டும்.
ஒரு மரத்தின் அடியில் தூரிலிருந்து 50 முதல் 100 செ.மீ. தூரம் வரை தள்ளி ஒரு அடி ஆழத்தில் துவாரம் ஒரு மீட்டர் இடைவெளியில் கடப்பாரையால் குழி எடுக்க வேண்டும்.
நம் தமிழகத்தில் பல பகுதியில் நல்ல நீர் மற்றும் மண்வளம் இருக்கும் பகுதியில் ‘மா’வில் பல மடங்கு நன்மை பெறலாம். பழங்களை அறுவடை செய்ததும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை கல்டார் இட உகந்த தருணமாகும்.
மரத்தின் வயதுக்கு தக்கவாறு கல்டார் பயன்படுத்த வேண்டும். 3 முதல் 4 வருட வயதுடைய மா மரங்களில் ஒரு மாதத்திற்கு 5 மில்லி பயன்படுத்த வேண்டும்.
5 முதல் 6 வயதுடைய மரத்துக்கு 10 மில்லி தேவை. 7 வயது முதல் 10 வயது வரை வயதுடைய மா மரத்துக்கு 20 மில்லியும் 11 முதல் 20 வயது வரை இருப்பின் 30 மில்லியும் 20 வயதிற்கு மேல் உள்ள போது 40 மில்லியும் மருந்து சுத்தமான நீரில் கரைத்து இட வேண்டும்.
பயிர் ஊக்கியை அளவுக்கு அதிகம் பயன்படுத்துவதும் உரிய நீர்பாசன வாய்ப்பில்லாத போதும் கல்டார் வேலை செய்யாது.