பூச்சிக்கொல்லி என்னும் உயிர்க்கொல்லி…

 |  First Published Nov 13, 2016, 2:42 AM IST



நாம் பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகளால் உண்ணும் உணவும் குடிக்கும் நீரும், காற்றும் மாசடைவதாக மட்டும் நினைத்தால் அது தவறாகும்.

பயிர்களுக்கு வரும் நோய்களுக்கு என்ன காரணம் என்று ஆராயப்படுகிறது. கடைசியில் குறிப்பிட்ட வகைநோய்க்குக் குறிப்பிட்ட வகை நுண்கிருமிகள் அல்லது புழுப் பூச்சிகள் என்று கண்டறியப்படுகிறது.

Tap to resize

Latest Videos

அதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு வகையான நுண்ணுயிர் இனங்கள் காரணம் எனக் கண்டறியப்படுகிறது. அவற்றைக் கொல்வதற்காக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப் படுகிறது. 

பொதுவாக குற்றம் செய்பவர்களைத்தான் தண்டிப்போம். தண்டிக்க வேண்டும். ஆனால் இந்தப் பூச்சி விஷயத்தில் மட்டும் குற்றவாளிகளைவிட அடுத்தவர்களை அதிகமாகத் தண்டிப்போம்.

ஆம்! தீங்கு விளைவிக்கும் பூச்சிகளுக்காகத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் பயிர்களுக்கு நன்மை விளைவிக்கும் பூச்சிகளும் சேர்ந்து கொல்லப்படுகிறது. 

அதாவது சில நோய்களை உருவாக்கும் பூச்சியினங்களை அழித்து பயிர்களுக்கு நன்மை விளைவிக்கும் பூச்சி இனங்களும் உள்ளன.

நாம் சில வகைப் பூச்சிகளை அழிக்கத் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகள் நன்மை செய்யும் பூச்சி இனங்களையும் சேர்த்துக் கொல்கின்றன.

அதனால் தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகள் தடையின்றி வளர்கின்றன. 

இப்படியாக ஒவ்வொரு நோய்க் கிருமிகளைக் கொல்ல தெளிக்கப்படும் நஞ்சுகளால் நன்மை செய்யும் உயிரிகள் அளவின்றிக் கொல்லப்படுவதால் பயிர்களின் உண்மையான எதிரிகளுக்கு எதிரிகளே இல்லாமல் போய்விட்டன. 

அதே சமயம் தொடர்ந்து நஞ்சுகளையே பயன்படுத்துவதால் அதனால் கொல்லப்படும் தீய உயிரிகளுக்குக்கூட எதிர்ப்புசக்தி அதிகரித்துவிடுகிறது. 

அதனால் பயிர்களை நோயாகத் தாக்கும் பூச்சியினங்கள் இயற்கை எதிரிகளும் இல்லாமல் பூச்சிகொல்லிகளுக்கும் அழியாமல் பயிர்களை நாசம் செய்து விவசாயியை வாட்டி வதைப்பது தங்குதடை இல்லாமல் நடக்கிறது. 

இப்படியொரு விஷ வட்டத்தில் மாட்டிக்கொண்டு விவசாயம் விழிபிதுங்கி நிற்கிறது!. 

சுற்றுச் சூழலையும் கெடுத்து விவசாயத்தையும் மீளாத் துயரில் தள்ளி வெற்றிநடைபோடுகிறது நமது வேளாண் அறிவியல்!

click me!