நெற்பயிரைக் களை எடுக்கும் பருவத்தில் இலை உறைக் கருகல் நோய் தாக்க வாய்ப்பு அதிகம். இந்நோய் தாக்காமல் நெற்பயிரைக் கட்டுப்படுத்தும் முறைகளை இங்கு பார்க்கலாம்.
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வாகைக்குளம், பிரம்மதேசம், மன்னார்கோவில், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நெல் பயிரில் இலை உறைக் கருகல் நோய் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது.
நோய் பரவும் காரணிகள்
வயல் வெளிகளிலும், சுற்றுப்புறங்களிலும் நிரந்தரமாகக் காணப்படும் புல் மற்றும் களைச் செடிகளில் இருந்து இந்த நோய் எளிதில் நெல் பயிருக்கு பரவுகிறது. மேலும் இந்நோய் மண் மூலமாகவும், அதிகமான ஈரப்பதம் காரணமாகவும், மிதமான வெப்பம் இருக்கும் சூழல் மற்றும் பாசன நீர் மூலம் அடுத்த வயல்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.
நோயின் அறிகுறிகள்
நோயின் தாக்குதல் முதலில் நீரின் மேற்பகுதியில் உள்ள இலை உறையின் ஓரங்களில் காணப்படும். இலைகளில் முட்டை வடிவத்தில் சாம்பல் பச்சை நிறத்தில் புள்ளிகள் காணப்படும். பின்பு அவை வெண்ணிறப் புள்ளிகளாய் மாறும். மேலும் தாக்கப்பட்ட பகுதிகளில் பழுப்பு நிற கடுகு போன்ற பூஞ்சாண விதைகளைக் காணலாம். இப் புள்ளிகள் ஒன்றாக இணைந்து படை படையாகத் தென்படும். இலைகளின் பெரும்பகுதி தாக்கப்படும்போது இலை கரிந்து மடிந்து விடும்.
கட்டுபடுத்தும் முறைகள்
வயல்வெளிகள், சுற்றுப்புறங்களில் புல் மற்றும் களைச் செடிகள் இல்லாதவாறு சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சதுர நடவு (திருந்திய நெல் சாகுபடி) மேற்கொள்வதன் மூலம் இந்நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
தழைச்சத்து உரங்களை சமமாகப் பிரித்து இட வேண்டும்.
நோய் தாக்கிய வயலில் இருந்து அடுத்த வயலுக்கு நீர் பாய்ச்சக் கூடாது.
டிரைக்கோடெர்மா விரிடி என்ற இயற்கை ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியையும் இனப் பெருக்கத்தையும், ஊக்குவிக்கும் வகையில் நிலத்திற்கு அதிக அளவில் இயற்கை தழைச் சத்து உரங்களை இட வேண்டும்.