பல்லாண்டுகளாக பூசணி மற்றும் பரங்கி வகைகள் மனித இன உண்வுக்காக பயன்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், நீர் வசதி குறைந்த மாவட்டமாக இருப்பினும் இங்குள்ள விவசாயிகள் குறைந்த நீரைக் கொண்டு சாகுபடி செய்யக்கூடிய பயிர்களைத் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டு வருகின்றனர்.
undefined
குறைந்த நீர், குறைந்த செலவு, குறைந்த வேலை ஆட்கள் ஆகியவைகளைக் கொண்டு மிக எளிதாக பயிரிடக் கூடிய பயிர்தான் சாம்பார் பூசணி.
கடந்த 10 வருடமாக சாம்பார் பூசணி விவசாயம் செய்து வரும் கணேசனின் அனுபவம்:
“வருஷா வருஷம் நெல்லு அறுவடைக்குப் பிறகு பூசணி பயிர் செய்வேன். மழை குறைவா இருந்தா நெல்லுக்குப் பதிலாகவும் இதப் பயிர் செய்வேன். பொதுவா பூசணிக்கு மணல் கலந்த வண்டல் மண் ரொம்ப நல்லது. வடிகால் வசதி நல்லா இருக்கனும், தண்ணி தேங்குச்சுன்னா அழுகிவிடும். என்னோட நிலம் செம்மண் பூமிங்கரதுனால பூசணி நல்லா வரும்.
சாம்பார் பூசணி பயிர் செய்ய தைப்பட்டம் அல்லது மார்கழிப்பட்டம் மிகச் சிறந்தது. பருவ மழை குறைஞ்சா ஐப்பசிய விட்டுட்டு கார்த்திகைல கூட பயிரிடலாம்
தைப்பட்டத்துல சாம்பார் பூசணி 1 1/2 ஏக்கர்ல பயிர் செய்தேன். மூணு தடவை நல்லா உழுது சரி பண்ணி, ஒரு ஏக்கருக்கு 5 வண்டி தொழுவுரம் போட்டு ரோட்டவேட்டர்ல நல்லா புழுதி அடிச்சு மட்டம் செய்தேன்
ஒரு ஏக்கருக்கு 300 குழிகள் எடுத்தேன். அதாவது 9 அடி X 9 அடி இடைவெளியில 1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட குழிகளை எடுத்து அதுல 1 கூடை நல்லா மக்குன தொழுவுரத்தைப் போட்டேன். ஒவ்வொரு குழியிலும் 5விதைகளை 1 இன்ச் ஆழத்துல ஊன்றி தண்ணீர் பாய்ச்சினேன்.
நாட்டுப் பூசணியோட வயது 85 முதல் 90 நாள் தான். விதைக்குன்னு தனிச்செலவு செய்றது இல்லை. ஒவ்வொரு வருடமும் என்னோட நிலத்துல விளையிற பயிரிலிருந்து நானே விதை எடுத்து பயிர் செஞ்சுட்டு வர்றேன். நான் பயிர் பண்ணுற நாட்டு ரகமே நல்ல விளைச்சலைக் கொடுக்கிறது. பிறகு ஏன் மத்த விதைகளைத் தேடி வாங்கணும்.
இதுக்குத் தண்ணீரை அதிகமாப் பாய்ச்சக் கூடாது. முளைப்பு வர்ற வரைக்கும் ஒவ்வொரு குழியிலயும் தண்ணியப் பூ மாதிரி ஊத்தணும். குடத்துல தண்ணி எடுத்து வந்து கையில ஊத்தி பூவாளி கணக்கா, விதை தெறிச்சு வெளியில வந்துடாம ஜாக்கிரதையா 1 நாள் விட்டு 1 நாள் ஊத்தணும்.
நாலு அல்லது அஞ்சாவது நாள் முளைப்பு வந்திடும். 25 நாட்களுக்குப் பிறகு வாய்க்கால் வழியா தண்ணி பாய்ச்சலாம்.
அடியுரமா 1 மூட்டை ஸ்பிக் டிஏபி மட்டும் போட்டேன். அதற்கப்புறம் 30 வது நாள் 1 மூட்டை ஸ்பிக் டிஏபி மற்றும் 40 வது நாள் 35 கிலோ ஸ்பிக் யூரியாவோட நாங்க வீட்ல இடிச்சு வச்சிருக்கிற வேப்பமுத்து 15 கிலோ சேத்து 300 குழிக்கு தூவி நல்லா தண்ணி கட்டினேன். பூ, பிஞ்சு தென் பட்டவுடன், ஸ்பிக் சைட்டோசைம் 250 மி.லி மருந்தை 100 லிட்டர் தண்ணியில கலந்து குளுமையா தெளிச்சேன். எல்லாப் பூவும் பிஞ்சாகியது. கைக்களையா 2 முதல் 3 களை எடுத்தேன்.
பிறகு, களை வளர்சியைப் பொறுத்து களை எடுத்தாப் போதும். நட்ட 45 – 50 நாள்ல பிஞ்சு பிடிக்க ஆரம்பிச்சது. மஞ்சள் நோய் விழுந்தால் ரொம்ப ஆபத்து. முழு பயிரையே தோண்டி எடுத்து வெளியில கொண்டுபோய் புதைச்சிடணும். இந்த பயிரில் சிகப்பு வண்டும், சாம்பல் நோயும் பிரச்சனையாக இருக்கும்.
சில சமயங்கள்ல இலை சுருட்டு புழுவும் வரும். 1 லிட்டர் நீருக்கு 5 மி.லி மோனோகுரோட்டோபோஸ், 2 கிராம் கார்பென்டாசிம் என்ற கணக்குல தண்ணீர் கலந்து தெளக்கணும். இதை 2 முறை செஞ்சா போதும். 85 நாள்ல இலை பழுத்து, பழத்தோட காம்பும் மஞ்சள் கலரா மாற ஆரம்பிச்சது. உடனே பாய்ச்சரத நிப்பாட்டிட்டேன். இது தான் அறுவடைப் பக்குவம்”
திருச்சி, மதுரை தான் சாம்பார் பூசணி விக்கறதுக்கு நல்ல மார்க்கெட். மதுரையில இருந்து திருப்பதி கோயிலுக்கு, அன்னதானத்திற்கு இருப்பு வச்சு லோடு லோடா அனுப்புறாங்க. அது மட்டுமில்லாம கேரளா மிகப்பெரிய மார்க்கெட்டு. கேரளாவுல அதிக அளவுல மக்கள் பயன்படுத்துராங்க. விக்கறதுக்கு முன்னால, எந்த மார்க்கெட்டுல என்ன விலை போகுதுன்னு பார்ப்போம். அதற்கு ஏத்த மாதிரி அறுவடை செஞ்சு லாரி பிடிச்சு அனுப்பணும்.
ஒரு ஏக்கருல 12 டன் மகசூல் கிடைச்சது. ஒவ்வொரு காயும் 5 கிலோ முதல் 20 கிலோ வரைக்கும் எடையிருந்தது. சராசரியா 10 கிலோ அளவுல அதிக காய் கிடைச்சது. கொஞ்ச காய் 20 கிலோ அளவுலயும் கிடைச்சது. 1 கிலோ 5 ரூபாய்க்கு மதுரையில விலைக்குப் போட்டேன். போனவருஷம் 10 ரூ வரைக்கும் விலை போச்சுது.
இந்த வருடம் விலை கம்மிதான். 12 டன் வித்ததுல ரூ 60,000 வரவு வந்தது. ஆள் கூலி, உரம், அறுவடை, வண்டி செலவு என ரூ 10,000 வரைக்கும் செலவு போக கையில ரூ 50,000 லாபமா கிடைச்சது.