நெல் பயிரிடும் வயல்களின் வரப்புகளில் உளுந்து விதைத்து பயிர்ப் பாதுகாப்பை அதிகரிக்கலாம் என வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
சம்பா நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற நெல் நடவுக்கு முன் நடவு வயலில் கவனிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் கணேசன் கூறியுள்ள யோசனை:
undefined
பொதுவாக நெல் பயிரில் பூச்சி, நோய், களை வந்த பிறகு கட்டுப்படுத்துவதை விட வருமுன் காப்பதே சிறந்தது.
தொடக்கத்திலேயே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி வந்தால் நெல் பயிரில் பூச்சி, நோய்த் தாக்குதலைப் பெருமளவு கட்டுப்படுத்தி கூடுதல் மகசூல் பெறுவதோடு சாகுபடிச் செலவையும் குறைக்கலாம்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளுள் ஒன்றான நெல் வயல் வரப்புகளில் உளுந்து விதைத்தலை மேற்கொள்ள வேண்டும். நடவு வயலில் வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் உளுந்து விதைக்க வேண்டும்.
இந்தப் பயிரில் நெல் பயிரைத் தாக்காத அசுவணிகள் உற்பத்தியாகும். இவற்றைப் பிடித்து உண்ணும் ஏராளமான பொறிவண்டுகள் இவற்றால் கவரப்படும். இந்தப் பொறிவண்டுகள் நெல்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சியினமாகும். இவை நெல்பயிரைத் தாக்கும் பலவித சாறு உறிஞ்சும் பூச்சிகளைத் தாக்கி, அவற்றை உண்டு, நெற்பயிரை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்தும்.
வரப்பில் உளுந்து விதைப்பதால் வரப்பு தூய்மையாகி களைகளின்றி இருக்குமென்பதால் களைகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும்.
ஏக்கருக்கு 2 கிலோ உளுந்து விதை போதும். வரப்பின் ஓரத்தில் 30 செ.மீ. இடைவெளியில் உளுந்தை விதைக்க வேண்டும்.உளுந்தால் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
எனவே, நெல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்து ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.