மதிப்பு வாய்ந்த தாவரம் நீலி அவுரி…

First Published Dec 15, 2016, 11:29 AM IST
Highlights


நீலி என சமஸ்கிருதத்திலும்  சென்னா என ஆங்கிலத்திலும்  அறியப்படும் அவுரி எனும் குறுந்செடியினம்  இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் அதிகம் பயிராகும் தாவரமாகும்.

வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி  உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை விளை  நிலங்களில், நெல் அறுவடைக்குப் பின், அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார். அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல , அவுரி  18  வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது. ஆதலால் அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கிவிடும்.

அதில் விளையும் உணவினை உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர். ஆனால், இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது, எளிதில் நோய் தாக்கும் படி பூஞ்சையாக மாறிவிட்டார்கள்.

ஆனால்  இப்போது அவுரி நெல்லைவிட மதிப்பு வாய்ந்த தாவரமாக மாறிவிட்டது .நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி  ஆகும் மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது.

குறிப்பாக தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் திருநெல்வேலி சென்னா என்றும் ஏற்றுமதி பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, இராநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அவுரி சுமார்  3000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5000 டன் இலைகளும் காய்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் சுமார்  5 கோடி ரூபாய் வரை அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பண்டைய நாட்களில் இருந்தே நமது  கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும்  தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும் அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர்.

அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது. நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.

இன்னும் உலகில்இயற்க்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது, நாம் தான் சந்தோஷமாக நமது இயற்க்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, செயற்கை சாயங்களை பயன்படுத்தி தோல் வியாதிகளில் சிக்கித் தவித்து வருகிறோம்.

click me!