நெல் பயிரில் பலவித நோய்களை உருவாக்கும் பருவம், விளைச்சளை அதிகமாக பாதிக்கும் பருவம். இப்பருவத்தில் நெல்லை பயிரிட அதிக கவனம் தேவை. பயிர்களை நோயிலிருந்து பாதுகாத்தே தீர வேண்டும். இல்லையெனில் விளைச்சல் பாதிக்கப்படும்.
நிறைய விவசாயிகள் நெல்லில் வரும் நோய்களைத் தடுக்க மருந்து அடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்து உள்ளார்கள். என்ன மருந்து அடிக்க வேண்டும் என்றும் அறிந்துள்ளார்கள் ஆனால் எப்போது அடிக்க வேண்டும் என்று தான் பலருக்கு தெரியவில்லை.
‘டைத்தேன் மருந்தை அடித்தும். இப்போது நோய் அதிகமாக உள்ளது’ என்று குறை கூறும் விவசாயிகள் பலர் உள்ளனர். அவர்கள் அந்த மருந்தை அடித்தது நட்ட 30வது நாள். நோய் தீவிரமாக வந்தது நட்ட 60வது நாள். டைத்தேன் மருந்தின் வீரியம் அடித்து 10-15 நாட்களுக்கு தான் இருக்கும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை.
எப்போது மருந்து அடிக்க வேண்டும் என்பதை நாம் அவசியம் அறிய வேண்டும். இல்லையென்றால் நாம் அடித்த மருந்தினால் எந்த வித லாபமும் இல்லை. மருந்து வாங்கிய பணம் தான் நஷ்டம்
சம்பா பருவத்தில் வரும் முக்கிய நோய் குலைநோய். ஐ.ஆர்.50, டி.கே.எம்.9, பொன்மணி, பொன்னி, வெள்ளை பொன்னி, போன்ற ரகங்களில் இந்த நோய் பெரும் அளவில் தோன்ற வாய்ப்பு உள்ளது. கண் வடிவப் புள்ளிகள் இலைகளில் தோன்றும். இந்நோய் நாற்றங்காலில் பெரும் அளவு தோன்றும்.
இதை கட்டுபடுத்த விதைகளை கார்பண்டசிம், பைரோகுயிலான், ட்ரைசைகலோஸோல் ஆகிய ஏதாவது ஒரு மருந்துடன் 1 கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். விதைச் சிகிச்சை செய்யாதோர் நாற்றங்காலை தினசரி கவனித்து கண் வடிவ புள்ளிகள் தோன்றியவுடனேயே எடிபன்பாஸ் மருந்தை எக்டேருக்கு 500 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
நட்ட பயிரில் முதல் ஒரு மாதம் இந்நோய் தென்படாது. பயிரின் வயது 2 மாதம் ஆகும் போது இந்த கண் வடிவப் புள்ளிகள் தோன்றிய உடன் எடிபன்பாஸ் மருந்தை தெளிக்க வேண்டும். இரவில் பனி அதிகமாகும் பொழுது (கார்த்திகை, மார்கழியில்) அதிகமாக இந்நோய் பரவும்.
நோய் மிகவும் தீவிரமடைந்த பின் எந்த மருந்து அடித்தாலும் இந்நோயைக் கட்டுபடுத்த முடியாது. . கதிரின் கழுத்து பகுதியில் இந்நோய் அதிகமாக வரும். பாதிக்க பட்ட கழுத்துகள் உடைந்து விடும். ஆகவே அது சமயமும் ஒரு முறை மருந்தடிக்க வேண்டும்.
நெல்லில் சம்பா பருவத்தில் தீவிரமாக வரும் மற்றொரு நோய் துங்ரோ. பாதிக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும், இலைகள் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இது ஒரு வைரஸ் நோய். வைரஸ் கிருமிகளை பச்சைதத்துப் பூச்சிகள் பரப்புகின்றன. இளஞ்செடிகள் தான் வைரஸ் நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. நாற்றங்காலில் இந்நோயைப் பரப்பும் பூச்சிகளைத் தடுக்க கார்போபியுரான் ஒரு செண்டுக்கு 175 கிராம் அளவில் இட வேண்டும். நாற்றுகளை பறிக்கும் முன் 10 நாட்களுக்கு முன்பாக இட வேண்டும். வளர்ந்த பயிரில் இந்நோய் அதிகமாக பரவுவதில்லை. விதைத்த 60 நாட்களுக்கு பின் இந்நோய் இயற்கையாகவே பரவுவதில்லை.
கண்ணாடி இலையுறை அழுகல் நோய் சம்பா பயிரை அதிகம் பாதிக்கிறது. இந்நோய் கதிர் வெளிவரும் நேரத்தில் மட்டும் இலையுறைகளை பாதிக்கிறது. கதிர் வெளிவந்தவுடன் அந்த இலையுறைகளுக்கு இயற்கையிலே எதிர்ப்பு சக்தி வந்து விடுகிறது. கதிர் வெளிவரும் அந்த 7 முதல் 10 நாட்களில் தான் மருந்தடிக்க வேண்டும்.
ஆகவே விவசாயிகள் யாவரும் நோய்களுக்கு எப்போது மருந்து அடிக்க வேண்டும் என்பதை அறிந்து மருந்தடிக்க வேண்டும்.