விவசாயிகள் பஞ்ச கவ்யம் என்ற இயற்கை தெளிப்பு உரக் கரைசலை எல்லா தானியப் பயிர்களுக்கும், பூச்செடிகளுக்கும், பழ மரங்களுக்கும் தெளித்து பயன்பெற்று வருகின்றனர்.
பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை:
undefined
புதிய பசுமாட்டு சாணம் 7 கிலோ, பசு மாட்டு சிறுநீர் 7 லிட்டர் இத்துடன் தண்ணீர் 10 லிட்டர் இவைகளை சிமெண்ட் தொட்டி, பானை, பிளாஸ்டிக் கேன், தாழி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இட்டு நன்கு கலந்து 21 நாள்கள் ஊற வைக்க வேண்டும். (இரும்பு மற்றும் அலுமினிய கொள்கலன்களைப் பயன்படுத்தக் கூடாது).
தினசரி 2-4 முறை நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலக்குவதால் நொதித்தலினால் உருவாகும் வாயு வெளியேற இது உதவும். 22-ம் நாள் இத்துடன் பசுமாட்டுப்பால் 2 லிட்டர், நன்கு புளித்த பசுமாட்டுத் தயிர் 2 லிட்டர், பசுமாட்டு நெய் 3 லிட்டர், கரும்புச்சாறு 3 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 12 எண்கள், பனை அல்லது தென்னை பதனீர் 2 லிட்டர் (வாய்ப்பு இருப்பின்) ஆகியவைகளை நன்கு கலந்து சேர்க்க வேண்டும்.
கரும்பு சாறு கிடைக்காத போது 3 லிட்டர் நீரில் 1/2 கிலோ நாட்டுச் சர்க்கரையினை கரைத்து பயன்படுத்த வேண்டும். அனைத்தையும் சேர்த்து மேலும் 7 நாள்கள் முன்பு போலவே தினமும் 2-4 முறை கலக்க வேண்டும். தற்போது பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், நுண்ணுயிர்கள், வளர்ச்சி ஊக்கிகள் பெருகி சத்து மிகுந்த இயற்கை உயிர் உரமான பஞ்ச கவ்யம் கரைசல் தயார்.
நாள்கள் அதிகமாக அதிகமாக பஞ்ச கவ்யத்தின் பலம் கூடும் கெட்டியாக மாறினால் போதிய அளவு நீர்விட்டு மீண்டும் கலக்கிவர வேண்டும்.
பஞ்ச கவ்யத்தை பயன்படுத்தும் முறை:
முறையாகத் தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்யம் 300 மில்லியை 10 லிட்டர் நீரில் கலந்து விசைத்தெளிப்பான் அல்லது கைத்தெளிப்பான் அல்லது நொச்சி இலை, வேப்பிலைக் கொண்டு இலை வழியாகக் காலை அல்லது மாலை நேரங்களில் எல்லா பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
இந்தக் கரைசல் தெளிப்பானில் ஊற்றி பயன்படுத்தும்போது கைத்தெளிப்பான் எனில் வடிகட்டியும், விசைத் தெளிப்பான் எனில் வால்வு மற்றும் குழாயின் நுனிப்பகுதியை பெரிதாக்கிக் கொண்டு பயன்படுத்தினால் நல்ல முறையில் தெளிக்க முடியும்.
பஞ்ச கவ்யத்தின் பயன்கள்
1.. பசுமாட்டு சாணம்:
பாக்டீரியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள்
2.. பசுமாட்டு சிறுநீர்:
பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து
3.. பால்:
புரதம், கொழுப்பு, மாவுப்பொருள்கள், அமினோ அமிலங்கள்,
கால்சியம் மற்றும் நைட்ரஜன் சத்துக்கள்
4.. தயிர்:
லேக்டோ பேசில்லஸ் ஜீரணிக்கத்தக்க செரிமானத்தன்மை
தரவல்ல நுண்ணுயிர்
5.. நெய்:
வைட்டமின்-ஏ, வைட்டமின் – பி, கால்சியம் மற்றும்
கொழுப்புச்சத்து.
6.. இளநீர்:
சைட்டோகைனின் என்னும் வளர்ச்சி ஊக்கி மற்றும்
அனைத்துவகை தாதுக்கள் (மினரல்ஸ்)
7.. கரும்புச்சாறு:
இனிப்பு (குளுக்கோஸ்) வழங்கி நுண்ணுயிர் வளர்ச்சியினை
அதிகரிக்கும்.
8.. வாழைப்பழம் மற்றும் பதனீர்:
மினரல் ஆகவும் நொதிப்புநிலையை அதிகப்படுத்தவும், நுண்ணூட்டச்சத்து அதிகப்படுத்தவும்.