1.. கோமாரி!
''வைரஸ் தாக்குதலால் வரக்கூடிய கொடுமையான நோய்ல இதுவும் ஒண்ணு. இது மிகவேகமாக பரவும். அதிக இழப்பையும் ஏற்படுத்தும். ஆடுகள் ஒண்ணோட ஒண்ணு நெருக்கமா இருக்கறதாலயும்... நோய் கிருமிகள் கலந்திருக்குற தண்ணீர், உணவு இதையெல்லாம் எடுத்துக்கறதாலயும்... காத்து மூலமாவும் இந்த நோய் பரவ வாய்ப்பிருக்கு. ஆடுகளுக்கு காய்ச்சல் வரும். வாய், நாக்கு, கால், குளம்பு, மடி மாதிரியான இடங்கள்ல கொப்புளம் வந்து புண்ணாகும். வாயிலிருந்து நுரை, கெட்டியான உமிழ்நீர் வெளியேறும். ஆடு இரை எடுக்காது. நடக்க முடியாது. 8, 12, 16 வார வயதுகள்ல தடுப்பூசிகள் போட்டுட்டா... நோய் வராது. பிறகு, 6 மாசத்துக்கு ஒரு தடவை தடுப்பூசி போட மறக்கக் கூடாது.
2.. வெக்கைச் சார்பு நோய்
வெக்கை நோய்க்கு மிகவும் நெருங்கிய வைரஸ் கிருமியால் வர்றதால... இதை 'போலி வெக்கை நோய்’னும் சொல்வாங்க. உடல் உள் உறுப்புகள்ல வெக்கை நோய் பாதிச்சா வர்ற அறிகுறிகள் எல்லாம் இதுலயும் வரும். பாதிக்கப்பட்ட ஆடுகளோட கழிவு, தீவனம், தண்ணீர், மனிதர்கள் மூலமா மத்த ஆடுகளுக்கும் பரவும்.
நோய் வந்தா... ஆடுகளுக்கு காய்ச்சல் அதிகமாகும். கண்ல நீர் வடியும். இருமல், மூக்கில் சளி கட்டுதல், கெட்ட வாடையோட கூடிய கழிச்சல், வாய் உட்பகுதியில் தவிடு மாதிரியான சிறுசிறு கொப்புளங்கள் இதெல்லாம் வரும். தடுப்பூசி மூலமா இதைக் கட்டுப்படுத்தலாம். நோய் கண்ட ஆடுகளைப் பிரிச்சு, மருத்துவர் மூலமா ஆன்ட்டிபயாடிக் மருந்துகளக் கொடுக்கணும். எளிதில் செரிக்கிற மாதிரியான உணவுகளைக் கொடுக்கணும். ராகி கஞ்சியை வெல்லம் போட்டுக் கொடுக்கலாம்.
3.. நிமோனியா
'கேப்ரைன் ப்ளூரோ நிமோனியா’ங்கிற இந்த நோய் 'மைக்கோபிளாஸ்மா’ங்கிற நுண்கிருமியால வருது. பாதிக்கப்பட்ட கால்நடைகள்ல இருந்து... தண்ணீர், தீவனம், காற்று மற்றும் மனிதன் மூலமாக மற்ற கால்நடைகளுக்கும் பரவும். நோய் கண்ட ஆடுகளோட உடல் வெப்பம் உயரும். மூக்கில் சளி கட்டி, மூச்சுவிட முடியாமல் இருமல் வரும். தீவனம் எடுக்காம இறந்துடும். நோய் கண்ட ஆடுகளைப் பிரிச்சு மருத்துவர்கிட்ட காட்டணும். சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தலாம்.