தக்காளி செடி
வீட்டுத் தோட்டத்தில் தக்காளி சாகுபடி செய்வது எளிதானது. சரியான பருவத்தில் பயிரிட்டால் தரமான தக்காளியை அறுவடை செய்யலாம்.
பருவம்
தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்.
நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
நாற்றங்கால் முறை
தோட்டத்தில் உள்ள மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும். 10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும். வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்கவும். தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும்.
தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.
விதைப்பும் பராமரிப்பும்
விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம். விதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்த்து விடலாம்.
வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும்.