கூடுதல் வருமானம் பெற இறவைப் பயிராகவும், மானாவாரிப் பயிராகவும் நிலக்கடலையை சாகுபடி செய்யலாம்…

 |  First Published Feb 1, 2017, 1:07 PM IST



இறவைப் பயிராகவும், மானாவாரிப் பயிராகவும் நிலக்கடலையை வைகாசிப் பட்டத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல மகசூலும், கூடுதல் லாபமும் கிடைக்கும்.

பருவம் மற்றும் ரகங்கள்: வைகாசிப் பட்டமாக (மே-ஜூன்) இருந்தால் டிஎம்வி-7, கோ-2, 3, கோ (ஜிஎன்)-4, விஆர்ஐ, விஆர்ஐ 2, 3 மற்றும் டிஎம்வி (ஜிஎன்)-13 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

Latest Videos

undefined

கார்த்திகைப் பட்டமாக (நவம்பர்-டிசம்பர்) இருந்தால் இறவைப் பயிராக மட்டும் வைகாசிப் பட்ட ரகங்களையே தேர்வு செய்து நடவு செய்யலாம்.

நிலம் தயாரிப்பு:

மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள், நிலக்கடலைப் பயிருக்கு ஏற்றவை. மண்ணின் தன்மைக்கேற்ப 4 அல்லது 5 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக்கலப்பை கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவு செய்ய வேண்டும். இறுதி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது நான்கு டன் மக்கிய தென்னை நார்க்கழிவை இட வேண்டும்.

விதையளவு:

மானாவாரிப் பயிருக்கு சிறிய பருப்பு 56 கிலோ, பெரிய பருப்பு 62.5 கிலோ தேவை. இறவைப் பயிருக்கு சிறிய பருப்பு 50 கிலோ, பெரிய பருப்பு 55 கிலோ போதுமானது.

விதை கடினப்படுத்துதல்:

விதையளவை அதிகப்படுத்தி பணம் விரயம் செய்வதைவிட விதையைக் கடினப்படுத்துல் என்ற தொழில்நுட்பத்தின் மூலம், முளைக்காத விதைகளை தனியே அப்புறப்படுத்திவிட்டு விதைப்பதன் மூலம் வயலில் தேவையான செடிகளைப் பெறலாம். பண விரயத்தையும் தடுக்கலாம்.

வறட்சியைத் தாங்கி விதைகள் முளைத்து வளர வேண்டுமெனில் விதைகளை கால்சியம் குளோரைடு என்ற ரசாயனக் கரைசலில் ஊற வைத்து உலர்த்தி அதன் பின்னர் உபயோகிக்க வேண்டும்.

செய்முறை:

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடு என்ற அளவில் 28 லிட்டர் தண்ணீரில் 140 கிராம் கால்சியம் குளோரைடு பயன்படுத்தி கரைசல் தயாரிக்க வேண்டும். இதில், ஒரு ஏக்கருக்குத் தேவையான 55 கிலோ விதையை 6 மணிநேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த விதைகளை ஈரச் சாக்கின் மீது பரப்பி அதை மற்றொரு ஈரச் சாக்கால் 24 மணி நேரம் வரை மூடி வைக்கவும். பின்னர், மேலே உள்ள சாக்கை நீக்கிவிட்டு சிறிதளவு முளைப்பு கண்ட விதைகளை தனியே பிரித்தெடுத்து நிழலில் உலர்த்தவும். இதேபோல, 2 அல்லது 3 முறை செய்து விதைகளை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்பு செய்ய வேண்டும்.

 

பயன்கள்:

கடினப்படுத்தப்பட்ட விதைகள் வறட்சியைத் தாங்கி வளரும். விதைகளில் தண்ணீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கும். இளம் பயிர்களில் பயிர் வீரியம் அதிகரிக்கும். முளைக்கும் தன்மை உள்ள விதைகள் கண்டறிந்து விதைப்பதால் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

விதை நேர்த்தி:

ரசாயன பூச்சிக் கொல்லி விதைநேர்த்தி செய்வதன் மூலம் கழுத்தழுகல், வேர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் அல்லது 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் மேன்கோசெப் என்ற அளவில் விதையுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும்.

உயிரியல் பூச்சிக் கொல்லி விதை நேர்த்தி செய்வதற்கு டிரைகோடெர்மா விரிடி என்ற பூசணம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலும், சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் நுண்ணுயிர் விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைக்கு நிலக்கடலை ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 2 பொட்டலங்களை அரிசிக் கஞ்சி 500 மி.லி உடன் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்பு செய்ய வேண்டும்.

விதைப்பு:

வரிசைக்கு வரிசை 30 செ.மீ., செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் ஒரு சதுரமீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு விதைப்பு செய்ய வேண்ம். விதை விதைக்கும் கருவியைப் பயன்படுத்தி விதைப்பு செய்வது சிறப்பாக இருக்கும்.

இல்லையெனில் களைகொத்து கொண்டு 30 செ.மீ. இடைவெளியில் குழி ஏற்படுத்தி குழிக்குள் விதையை விதைத்து பிறகு மண்ணால் மூட வேண்டும்.

அறுவடை:

முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல், மேல்மட்ட இலைகள் மஞ்சள் வண்ணமாக இருந்தால் முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடைக்கு முன்பு நீர் பாய்ச்ச வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருந்தால் நீர்ப்பாய்ச்சத் தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளை குவியலாக வைக்கக் கூடாது.

ஈரமாக இருந்தால் கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். செடிகளில் இருந்து காய்களைப் பிரிக்க நிலக்கடலை பிரிப்பானைப் பயன்படுத்தலாம்.காய்களை 4 அல்லது 5 நாள்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும்.

இதேபோல், 2 நாள் இடைவெளி விட்டு 3 முறை உலர்த்த வேண்டும். வெப்பநிலை அதிகளவு இருக்கும்போது நேரடியாக உலர்த்தக் கூடாது.காய்களைக் கோணிப் பைகளில் கட்டி மணற்பரப்பின் மீது சேகரித்து வைக்கலாம்.

இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.

click me!