நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளை எப்படியெல்லாம் அழிக்கலாம்…

 |  First Published Feb 1, 2017, 12:56 PM IST



இலை சுருட்டுப்புழு, அந்துப்பூச்சிகளின் இறக்கைகள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறம் கொண்டது. இப்பூச்சி தாக்குதலால் பயிர்களின் வளர்ச்சி குன்றிவிடும்.

இதைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 36-இ.சி 400 மில்லி/ஏக்கர் அல்லது குளோரிபைரிபாஸ் 200 மில்லி/ஏக்கர் இ.சி, 500 மிலி/ஏக்கர் வீதம் தெளிக்கலாம்.

Tap to resize

Latest Videos

நெல் பயிரை குருத்துப் பூச்சி தாக்கினால் ஏக்கருக்கு மானோகுரோட்டோபாஸ் 36% இ.சி 400 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.

புகையான்பூச்சி பழுப்பு நிறமானது. பூச்சிகள் தூர்களின் அடிப்பகுதியில் நீர் பரப்பிற்கு சற்று மேலாக அமர்ந்து சாற்றை உறிஞ்சும். பால் பிடிக்கும் முன்பே பயிர் கீழே சாய்ந்து கதிர்களை பதராக்கிவிடும்.

வயலில் தண்ணீரை வடித்துவிட்டு தூர்களின் அடிப்பாகங்களில் நன்கு படும்படி பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும்.

தாக்கப்பட்ட பயிருக்கு யூரியாவை அதிக அளவு இடக்கூடாது. இமிடா குளோபிரிட் 17.8% லிட்டருக்கு 0.5 மில்லி அல்லது குளோரிபைரிபாஸ் 20% இசி லிட்டருக்கு 2.5 மில்லி வீதம் தெளிக்க வேண்டும்.

பயிர் பூக்கும் தருணத்தில் நாவாய்ப் பூச்சி தாக்கும். இதைக் கட்டுப் படுத்த மாலத்தியான் 5 சதத்தூள் ஏக்கருக்கு 10 கிலோ தூவ வேண்டும்.

நெற்பயிரில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது குலைநோயாகும். இதைத்தடுக்க கார்பென்டாசிம் 50 டபிள்யூ (500 கிராம்/எக்டர்) இந்த மருந்தை கதிர்விடும் பருவத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் தெளிக்க வேண்டும்.

பாக்டீரியா இலை கருகல் நோயினைக் கட்டுப்படுத்த வேண்டும். தாக்கப்பட்ட பயிருக்கு யூரியாவை அப்படியே கொட்டாமல் இரண்டு அல்லது மூன்று முறைகளாக இடவேண்டும்.

ஐந்துசத வேப்பங்கொட்டை சாறு அல்லது மூன்று சத வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது 10 சத வேலிக்கருவேல் இலைப்பொடி சாறு அல்லது 20 சத சாணக்கரைசலை நோய் தோன்றும் தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம். இதனால் இலைக்கருகல் நோயினைக் கட்டுப்படுத்த இயலும்.

நாற்றுக்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். நாற்றுக்களை சூடோமோனாஸ் ஒரு கிலோ கலவையில் வேரை நனைத்து நடவுசெய்ய வேண்டும். நடவு வயலில் ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் போதிய தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

சூடோமோனாஸ் 200 கிராம் அளவினை 200 லிட்டர் நீரிலும் கலந்து தெளிக்க வேண்டும். பிரச்னை தொடர்ந்தால் ஏக்கருக்கு கார்பன்டாசிம் 200 கிராம் அளவினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். குலைநோய் பிரச்னை தொடராது.

நடவு வயலிலும், வரப்பிலும் பாசன வாய்க்காலிலும் களைச் செடிகளை அகற்றி வரப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வயலில் அறுவடைக்குப் பின் அடிக் கட்டைகளை வயலில் உழுது அழித்துவிட வேண்டும்.

நெற்பயிரில் கடைசி உழவுக்குப்பின் வேப்பம் புண்ணாக்கை இடும்போது பயிரைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். அளவிற்கு அதிகமாக தழைச்சத்து உரத்தை போடக்கூடாது.

தானிய நிறமாறல் நோய் வராமல் தடுக்க திரம் 200 கிராமுடன் கார்பென்டாசிம் 200 கிராம் (எக்டருக்கு) இரண்டு முறை அதாவது 50 சதம் பூத்த பிறகு ஒரு முறையும், பின் 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் கலந்து தெளிக்க வேண்டும்.

நெற்பழ நோய் தோன்றினால் கோசைட் 2.5 கிராம் (லிட்டர் தண்ணீரில்) 50 சதம் பூத்த பிறகு ஒரு முறையும் பின் 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.

click me!