துணி உற்பத்தி, ஆடை வடிவமைப்பு துணிகளின் அலங்காரம் ஆகியவற்றில் திறனும், வேளாண் வீண் பொருட்கள் பற்றிய அறிவும் இருப்பின் உழவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும்.
உலக அளவில் இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது. எனவே இயற்கை சாயம், வேளாண் கழிவுகளிலிருந்து கிடைக்கும் நூலிழைகளுக்கு தற்போது மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
உழவர்கள் வேளாண் கழிவுகளை (எரு) சோளத்தட்டை, வாழைத் தண்டு போன்றவற்றை வீணாக்காமல் அவற்றை நூலிழைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.
பல்வேறு இலைகள், பூக்கள், மரப்பட்டைகளில் இருந்து இயற்கை சாயம் தயாரிக்க முடியும்.
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்ற சொல்லுக்கேற்ப தையல் கற்றுக் கொண்டால் வேளாண்மை இல்லாத காலங்களில் வருமானம் பெற உதவியாக இருக்கும்.
இவற்றை மனதில் கொண்டு மனிதவள மேம்பாட்டுத்துறை இயற்கை சாயங்கள், நூல் தயாரிக்கும் இழைகள், அவற்றின் மூலப்பொருட்கள் பற்றிய ஆராய்ச்சிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
நெல் தரிசில் பயறுவகைப் பயிர்கள்:
காவிரி பாசனப்பகுதியில் நெல் அறுவடைக்கு முன்பாக அல்லது நெல் அறுவடைக்கு பின்னர் நிலத்தில் அதிகம் ஈரப்பதத்தைக் கொண்டு சாகுபடி செய்யப்படும் பயிர்கள் நெல் தரிசுப் பயிர்கள் என்றும் நெல் சார்ந்த பயிர்கள் எனவும் அழைக்கப்படுகின்றது.
உளுந்து, பச்சைப்பயறு போன்றவைகள் நெல் அறுவடைக்கு முன்பாக மெழுகுபதத்தில் விதைப்பு செய்யப்படுகிறது.
பருத்தி பயிர் நெல் அறுவடைக்குப் பின் வயலில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டு நெல் தாள்களுக்கு இடையில் எந்தவித நிலத் தயாரிப்பும் இல்லாமல் வரிசையாக விதைக்கப்படுகிறது.
நிலக்கடலைப்பயிர் ஆற்றுப் பாசனப் பகுதியில் மணற்பாங்கான நிலங்களில் நெல் அறுவடை செய்தபிறகு நிலத்தை நன்கு உழுது சமன் செய்து இயந்திரம் மூலமாகவோ ஆட்கள் கொண்டோ விதைக்கப்பட்ட பிறகு பாத்திகள் அமைக்கப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது.
தைப்பட்டத்தில் நெல் தரிசில் உளுந்து பயறு விதைப்பு செய்ய முடியாத சூழ்நிலை, பாசன வசதி இல்லாமை போன்ற காரணங்களைப் பழைய ஆற்றுப் பாசன பகுதிகளின் களிமண் பூமியில் குறைவான நிலத் தயாரிப்புடன் மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நெல் தரிசில் உயர்விளைச்சல் உளுந்து ரகங்களான ஏ.டி.டீ.3, ஏ.டி.டீ.4, பச்சைப்பயறு ரகங்களான ஏ.டி.டீ.3, கே.எம்.2 ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். விதைப்பு செய்ய தைப்பட்டம் (ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை) ஏற்ற பருவம். நல்ல முளைப்புத்திறன் உள்ள பூச்சி நோய்கள் தாக்காத, சான்றிதழ் பெற்ற விதைகள் இருந்தால் எக்டருக்கு 30 கிலோ விதை போதுமானது.
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் விதைநேர்த்தி செய்ய வேண்டும். 24 மணி நேரம் கழித்து 30 கிலோ விதையினை நுண்ணுயிர்களான ரைசோபியம் 600 கிராம், பாஸ்போ பாக்டீரியா 600 கிராம், குளிர்ந்த அரிசிக் கஞ்சியில் நாற்று விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தியபின் விதைக்க வேண்டும்.
ஆட்கள் மூலம் நெல் அறுவடை செய்யும்போது நெல் அறுவடைக்கு சுமார் 7-10 நாட்களுக்கு முன் சரியான ஈரப்பதத்தில் அதாவது மெழுகு பதத்தில் விதைக்க வேண்டும். இயந்திரம் மூலம் அறுவடை செய்வதாக இருந்தால் நெல் அறுவடைக்கு 4-6 நாட்களுக்கு முன்பு விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணிக்கையை பராமரிப்பது அவசியம்.
விளைச்சலை அதிகரிக்க நன்கு பூத்திருக்கும் தருணத்தில் ஒரு எக்டருக்கு 5 கிலோ “பயறு ஒண்டர்’ என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
பயறு ஒண்டர் கிடைக்காத நிலையில் விதைத்த 25 மற்றும் 40ம் நாள் 2 சதம் டி.ஏ.பி., 1 சதம் பொட்டாசியம் குளோரைடு, 40 பி.பி.எம். பிளானோபிக்ஸ் பயிர் வளர்ச்சி ஊக்கி அடங்கிய கரைசலை காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
நெல் தரிசு பயிரில் அதிகமாக தாக்குதலை ஏற்படுத்தும் புரோடீனியா என்ற புகையிலைப் புழுவை கட்டுப்படுத்த அதன் முட்டைக்குவியல்களையும் கூட்டமாக ஒரே இலையில் பச்சையத்தை சுரண்டி உண்ணும் இளம் புழுக்களையும் பொறுக்கி அழித்துவிட்டு எக்டருக்கு அரிசித்தவிடு 12 கிலோ, நாட்டுச்சர்க்கரை 1.25 கிலோ, கார்பரில் 1.25 கிலோ, போதுமான தண்ணீர் (7 லிட்டர்) கலந்து விஷ உண்ணி உருண்டைகளாக உருட்டி, வயலில் மாலை வேளையில் வைக்க வேண்டும்.