மாவுப்பூச்சியின் தோற்றம்:
உடல் முழுவதும் மாவு மற்றும் மெழுகுப் பூச்சுடன் கூடிய மாவுப்பூச்சிகள் 2.5 முதல் 4.0 மி.மீ. நீளமுள்ளது.
undefined
பெருமாலான மாவுப்பூச்சிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், சிலவகை வெள்ளை, கரு ஊதா மற்றும் மஞ்சள் நிறத்திலும் நீளவட்டமாகக் காணப்படும்.
உடலின் பக்கவாட்டிலும், பின் பகுதியிலும் மெழுகு போன்ற இலைகள் காணப்படும்.
வாழ்க்கைச் சரிதம்:
இப்பூச்சி முட்டை குஞ்சு மற்றும் வளர்ந்த பூச்சிகள் என மூன்று பருவங்களைக் கொண்டது.
தாய்ப்பூச்சிகள் முட்டை, வெள்ளைநிறப் பை போன்ற அமைப்பில், கிளைகள், இலைகள், நுனிக்குருத்து மற்றும் தரைப்பகுதியில் இருக்கின்றன. ஒரு பையில் 300 முதல் 600 முட்டைகள் வரை இருக்கும். முட்டைப்பருவம் 7-14 நாட்கள்.
குஞ்சுகள் பெண் இனத்தில் மூன்று நிலைகளையும், ஆண் இனத்தில் நான்கு நிலைகளையும் கொண்டது. முதல் நிலைக்குஞ்சுகளுக்கு தவழ்வான்கள் என்று பெயர். தவழ்வான்கள் மட்டுமே கால்கல் கொண்டது. குஞ்சுகள் சாதரணமாக 22-25 நாட்களில் வளர்ச்சி அடைந்து பூச்சிகளாகிவிடும்.
ஆண் பூச்சிகள் ஈ போல் இரு ஜோடி இறக்கைகளுடன் காணப்படும். இவை சேதம் எதுவும் செய்யாமல் இனப்பெருக்கம் முடிந்தவுடன் 2-3 நாட்களுக்குள் இறந்துவிடும்.
ஒரு வருடத்தில் மாவுப்பூச்சி 15 முறை இனப்பெருக்கம் செய்கிறது.
மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:
இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
இலைகள் வளைந்தும், நெளிந்தும், குருத்தில் இலைகள் சிறுத்து திருகிக் கொண்டிருக்கும்.
இலையில் அடிப்பகுதி, குருத்து கிளைகள் மற்றும் தண்டுப்பகுதிகளில் வெள்ளையாக அடைபோல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.
சிகப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.
பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன்மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும்.
அதிக தாக்குதலில் செடிகள் இலைகள் இன்றி வாடி கருகிவிடும்.
உயிரியல் முறையில் ஒட்டுண்ணி மூலம் பப்பாளி மாவுப்பூச்சி கட்டுப்பாடு:
பப்பாளி மாவுப்பூச்சியை அழிக்கக்கூடிய ஒட்டுண்ணிகளாக என்சிராட் என்ற குளவி இனத்தைச்சார்ந்த அசிரோபேகல் பப்பாயே, சூட்லெப்டோமேஸ்டிக்ஸ் மெச்சிகானா மற்றும் அனாகைரஸ் லாக்கி என்ற மூன்று ஒட்டுண்ணிகளை மெக்சிகோ நாட்டின் போர்டோரிக்கா மாகாணத்திலிருந்து அமெரிக்க வேளாண்மைத்துறையின் உதவியுடன் பெங்களூரில் உள்ள தேசிய அளவிலான நன்மை செய்யும் இயக்ககம் [NBAII] மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டு பெருக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் 9 வேளாண்மை கல்லூரிகள், 36 ஆராய்ச்சி நிலையங்கள் 14 வேளாண்மை அறிவியல் நிலையங்களில் உள்ள பூச்சியியல் துறை வல்லுநர்களுக்கு பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி பெருக்கம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
மூன்று விதமான ஒட்டுண்ணிகளில் அசிரோகேஸ் பப்பாயே ஒட்டுண்ணி மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் உள்ள ஆராய்ச்சி நிலையங்களில் பரவலாக பெருக்கம் செய்யப்பட்டு வருகிறது. 10 ஏக்கர் பயிர் சாகுபடி பரப்பிற்கு 100 ஒட்டுண்ணிகள் மூலம் மாவுப்பூச்சிகளை அழிக்கலாம்.
இவை தனித்துவாழ் முட்டை ஒட்டுண்ணியாகும். பெண் ஒட்டுண்ணியானது 50 முதல் 60 வரை முட்டைகள் இடும். பாலின விகிதம் 1:1 (ஆண்: பெண்), முதிர்ந்த பூச்சியானது நான்கு நாட்கள் வரை உயிர் வாழும். ஒட்டுண்ணியானது குறுகிய வாழ்க்கை காலமான 10 முதல் 14 நாளில் முடியும்.
ஒவ்வொரு பெண் ஒட்டுணியும் 50 முதல் 60 மாவுப்பூச்சியின் தவழ்வான்களை [2-ம் நிலை] தாக்கவல்லது. இந்த ஒட்டுண்ணிகள் தேர்வுத்திறன் கொண்டிருப்பதால் மற்ற பூச்சிகளை தாக்காமல் மாவுப்பூச்சியை மட்டுமே அழிக்கும் வல்லமை படைத்தது.
மாவுப்பூச்சியை ஒழிக்கும் புதிய ஒட்டுண்ணியை வயலில் விட்டபின் கவனிக்கவேண்டியவை:
ஒட்டுண்ணி விடுவதற்கு மாவுப்பூச்சியின் தாக்குதல் மிதமானது முதல் அதிகமானது வரை இருத்தல் வேண்டும்.
ஒட்டுண்ணியை வயல்களில் விட்ட பிறகு பூச்சிமருந்து தெளிப்பதைக் கட்டாயமாக தவிர்க்கவேண்டும்.
ஒட்டுண்ணி விட்ட வயல்களில் மாவுப்பூச்சித் தாக்கிய களைகளை அகற்றுதல் கூடாது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்:
மாற்று உணவாக இருக்கும் களைகளை உடனுக்குடன் எரித்து அப்புறப்படுத்தவேண்டும்.
கண்காணிப்பு முறைகளைக் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும்.
இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் சிறந்த இரை விழுங்கியான ஸ்பால்ஜியஸ், ஒண்ணிக் குளவிகள் போன்ரவற்றைப் பேணிப்பாதுகாக்கவேண்டும்.
தொடக்க நிலையில் மாவுப்பூச்சிகளின் குஞ்சுகளைக் கட்டுப்படுத்த வேப்பம் எண்ணெய் 2 சதம் அல்லது மீன் எண்ணெய் சோப்பு கரைசல் 2.5 சதம் பயிரில் நன்றாகப்படும்படி தெளிக்கவேண்டும்.
தாக்குதல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு புரபிகோனோபாஸ் 2 மி.லி. அல்லது டைமீத்தோயேட் 2 மி.லி. பூச்சிக்கொல்லி மருந்தினைத் 0.1% ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும்.
அத்துடன் 20 மி.லி. வேப்பெண்ணையைப் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து தெளிப்பதால் கட்டுப்படுத்தலாம்.