நெல் சொர்னவாரி, முன்சம்பா கார், குறுவை, சம்பா, பின்சம்பா, தாளடி, பிசாணம் பட்டங்களில் மத்தியகால நீண்டகால நெல் இரகங்களைப் பயிரிடலாம்.
இப்பருவத்திற்கு உகந்த சிறந்த புதிய நெ இரகங்களைப் பயிரிடுதல் மூலமதிக விளைச்சலைப் பெறலாம்.
மத்திய கால நெல் இரகங்கள் (130 - 140 நாள்கள்):
ஆடுதுறை 46 [ஏடீடீ28 / கோ43]
ஆடுதுறை 46 தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட மத்திய கால [135 நாட்கள்] இரகம், சம்பா, தாளடி, பிசாணம் ஆகிய பருவங்களுக்கு ஏற்றது.
எக்டருக்கு 6.1 டன் விளைச்சலைத் தரவல்லது. அரிசி, வெள்ளை நிறம், வயலில் தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப் புழுவிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.
துங்ரோ நச்சுயிரி, பழுப்பு இலைப்புள்ளி நோய்களுக்கு நடுத்தர எதிர்ப்பு கொண்டது. நீண்ட சன்ன அரிசியையுடைய இந்த இரகம் நல்ல அரவைத்திறனும், நடுத்தர அளவில் அமைலோஸ் மாவுப்பொருளும் கொண்டது.
சமைப்பதற்கு ஏற்ற நல்ல குணங்களைக் கொண்டது.
கோ [ஆர்] 48 [கோ 43 / ஏஎஸ்டி 19]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட மத்திய கால இரகம் இது. இந்த இரகம் 130 - 135 நாள்கள் வயது கொண்டது.
பின் சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் பயிரிட ஏற்றது. மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி அரிசியை ஒத்த சன்ன அரிசியைக் கொண்டது.
சராசரியாக ஒரு எக்டருக்கு 6100 கிலோ விளைச்சலை தரவல்லது. மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி, பிபிடி 5204 – ஐவிட முறையே 10, 17 சதம் விளைச்சலைத் தரவல்லது.
தத்துப் பூச்சிகளுக்கு நடுத்தர எதிர்ப்புசக்தி கொண்ட இந்த இரகம், குலைநோய், துங்குரோ, இலையுரை கருகல் நோய்களுக்கும் நடுத்தர எதிர்ப்பு சக்தி கொண்டது.
நல்ல அரவைத் திறனும், நடுத்தர மாவுச்சத்தும் சமைப்பதற்கு ஏற்ற சிறந்த குணங்களைக் கொண்டது.
கோ [ஆர்] 49 [சி 20 / ஆர்.என்.ஆர் 52147]
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட இந்த இரகம் 130 - 135 நாள்கள் வயது கொண்டது.
கோ [ஆர்] 49 இரகம் பின் சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் பயிரிட ஏற்றது. ஒரு எக்டருக்கு 6300 கிலோ விளைச்சலைத் தரவல்லது.
அதிக அளவாக எக்டருக்கு 9.75 டன்கள் வரை விளைச்சலைத்தந்துள்ளது. பிபிடி 5204 அரிசியை ஒத்த சன்ன அரிசியைக்கொண்டது. நடுத்தர குட்டையான உயரத்தைக் கொண்டிருப்பதால் சாயாத பண்பினைக் கொண்டது.
பிபிடி 5204 ஐ விட 11.2 சதம் அதிக விளைச்சலைத்தரவல்லது. தண்டு துளைப்பான், பச்சைத்தத்துப் பூச்சிக்கு மிதமான எதிர்ப்பு சக்தி கொண்டது.
குலைநோய், துங்ரோ நோய் ஆகியவற்றிற்கு மிதமான எதிரிப்புசக்தியை கொண்டது. சன்ன அரிசி, நடுத்தர மாவுச்சத்து சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது.