இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி செய்ய இதுதான் சரியான வழி...

Asianet News Tamil  
Published : May 28, 2018, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி செய்ய இதுதான் சரியான வழி...

சுருக்கம்

This is the right way to cultivate watermelon naturally.

தர்பூசணி சாகுபடி...

தர்ப்பூசணியில் ஏராளமான ரகங்கள் உள்ளன. அவை நியூ ஹாம்ப்ஷைர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹ ஜயமாடோ, பெரிய குளம் 1, அர்கா, மானிக், அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்கா ஜோதி, பூசா பேதனா, அம்ருத் உள்ளிட்டவை. 

அதிக மகசூல் தரக் கூடிய ரகம் பெரியகுளம் 1 எனப்படும் பிகேஎம் 1 ஆகும். இதில் பழங்கள் பெரிதாகவும், அடர் பச்சை நிறம் கொண்டதாகவும், உள்ளே சதைப் பகுதி இளஞ்சிவப்பு, சிவப்பு நிறத்திலும் இருக்கும். 

மகசூல் ஹெக்டேருக்கு 122-135 நாள்களில் 36-38 டன் கிடைக்கும்.
 
மண், தட்பவெப்பநிலை: 

மணல் கலந்த நிலம் மிகவும் உகந்தது. அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரத்தன்மை, நல்ல சூரிய வெளிச்சத்துடனும் உள்ள தட்பவெப்பநிலை பயிர் செய்ய ஏற்றது. குறைந்த வெப்பநிலையில் விதைகள் முளைப்பது குறைவாக இருக்கும். 

காய்கள் முதிர்ச்சி அடையும் பருவத்தில் அதிக வெப்பநிலை நிலவுவது பழங்களில் இனிப்புத் தன்மையை அதிகரிக்கும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சி தடைபடும்.
 
பருவம்: 

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்படும் பயிர் கோடைக் காலத்தில் அறுவடை செய்யப்படும். கோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதைத் தவிர ஜூன், ஜூலை மாதங்களிலும் விதைப்பு செய்யலாம்.
 
நிலம் தயாரித்தல்: 

நிலத்தை 3, 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 30 டன் மக்கிய தொழு உரமிட்டு மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்களை அமைத்திட வேண்டும். 

இந்த வாய்க்கால்களின் உள்புறம் 1 மீட்டர் இடைவெளியில் 45 *  45 * 45 செ.மீ நீள, அகல, ஆழ அளவில் குழிகள் தோண்ட வேண்டும். இக்குழிகளில் சம அளவு மேல் மண், தொழு உரம் ஆகியவற்றுடன் ரசாயன உரங்களைக் கலந்து இட வேண்டும்.
 
உரப் பாசனம்: 

தர்ப்பூசணி பழத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு தழை, மணி, சாம்பல் சத்து முறையே 200:100:100 கிலோ. இந்த அளவைப் பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும். 
 
விதையும், விதைப்பும்: 

ஒரு ஹெக்டேருக்கு விதைக்க சுமார் 3, 4 கிலோ அளவு விதை தேவை. குழி ஒன்றுக்கு 4, 5 விதைகளை தூவி பின்னர் முளைத்து வந்தவுடன் குழிக்கு 3 செடிகள் இருக்குமாறு கலைத்து விட வேண்டும்.
 
நீர் நிர்வாகம்: 

பருவ மழைக் காலங்களில் மானாவாரியாகப் பயிர் செய்யலாம். கோடைக் காலத்துக்கு அறுவடை செய்யப்படும் பயிரை பாசனப் பயிராகப் பயிர் செய்யலாம். மானாவாரியில் மழை வந்தவுடன் குழிகள் தோண்டி விதைப்பு செய்ய வேண்டும். இரைவையில் விதைப்பதற்கு முன்னர் குழிகளில் நீர் ஊற்றிப் பின்னர் 7,10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் ஊற்ற வேண்டும். 

விதைகள் முளைத்து வந்த பின்னரே வாய்க்கால்கள் மூலம் நீர் பாய்ச்சுதல் வேண்டும். நீர் பாய்ச்சுதலை ஒரே சீரான இடைவெளியில் செய்ய வேண்டும் (சுமார் 10 நாள்களுக்கு ஒரு முறை) அதிக நாள்கள் நீர் பாய்ச்சாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக் குறைவான நிலைக்குப் போன பின்னர் திடீரென்று நீர் பாய்ச்சினால் காய்கள் வெடித்து விடும். இவ்வாறு வெடித்த காய்கள் விற்பனையில் விலை குறைந்து போக ஏதுவாகும்.
 
களை கட்டுப்பாடு, பின்செய் நேர்த்தி: 

விதைத்த 15, 30-ஆம் நாள்களில் களைக்கொத்து கொண்டு களை நீக்கம் செய்ய வேண்டும். விதைத்த 15-ஆம் நாள் (பயிர் 2 இலைகளுடன் இருக்கும்போது) டிபா என்ற பயிர் ஊக்கியை 25.50 பி.பி.எம் என்ற அளவில் கரைத்துத் தெளிக்க வேண்டும். 

மீண்டும் ஒரு வாரம் கழித்து இதே அளவில் கலந்து ஒரு முறை தெளிக்க வேண்டும். இதற்குப் பதிலாக எத்ரல் பயிர் ஊக்கியை கீழ்க்கண்ட தருணத்தில் 4 முறை தெளிக்கலாம். (2 மி.லி. மருந்து 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து) முதல் இரண்டு இலைப் பருவம், ஒரு வாரம் கழித்து, மேலும் ஒரு வாரம் கழித்து, மீண்டும் ஒரு வாரம் கழித்து என 4 முறை தெளிக்க வேண்டும். 

கொடிகள் படர ஆரம்பித்தவுடன் வாய்க்கால்களிலிருந்து எடுத்து இடைப்பகுதியில் படரச் செய்ய வேண்டும். விதைத்த 30-ஆம் நாள் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதற்கு குழி ஒன்றுக்கு 13 கிராம் யூரியா இட வேண்டும். 
 
அறுவடை: பழங்கள் முற்றி பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கான அறிகுறி என்பது பழத்தை தொட்டுப் பார்த்தால் மட்டுமே தெரியும். நன்கு முற்றிப் பழுத்த பழத்தை விரலால் தட்டிப் பார்க்கும்போது ஒரு மந்தமான ஒலி உண்டாகும். 

பழம் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் பசுமை நிறம் மாறி மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறமடையும். பழங்களைக் கையில் எடுத்து அழுத்தம் கொடுக்கும்போது அப்பகுதி எளிதில் உடைந்து நொறுங்கும். 

சாதாரணமாக மலர் விரிந்து மகரந்தச் சேர்க்கை நடந்து சுமார் 30 முதல் 40 நாள்களில் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். சாதாரணமாகவே தர்ப்பூசணி ஒரு மகசூலுக்கு ஹெக்டேருக்கு 25 முதல் 30 டன்கள் வரை கிடைக்கும். 
 

PREV
click me!

Recommended Stories

Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!
Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!