மண் வளத்தை பாதுகாக்கவும், பயிர்களுக்கு கொடுக்கும் உரச்செலவை குறைக்கவும், இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைக்கவும் மண் மாதிரி எடுத்து மண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.
மண் பரிசோதனை செய்வதால் நிலத்தில் நிறைவாக உள்ள சத்துக்கள் மற்றும் குறைவாக உள்ள சத்துக்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
மண் பரிசோதனை செய்வதால் நமது நிலத்திற்கு தேவையான சத்துக்களை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் இயற்கை உரங்களை இடலாம்.
ஒரு சில பயிர்களுக்கும் வெவ்வேறு வகையான சத்துக்கள் தேவைப்படும்.
மண் பரிசோதனை மூலம் அதனை தெரிந்து தேவையான உரங்களை கொடுக்கலாம்.
தேவையான பொருள்கள்:
மூங்கில் குச்சி அல்லது அலுமினியகரண்டி, துணிப்பை, மண்வெட்டி.
எடுக்கும்முறை:
மண் மாதிரியை மர நிழல், வரப்பு, வயலோரம், வாமடைப்பகுதி, எரு கொட்டிய இடம் ஆகிய இடங்களிலிருந்து எடுக்கக்கூடாது.
ஒரு வயலில் குறைந்தது 10-16 இடங்களில் மண் மாதிரிகள் எடுக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு இறுதியாக ஒரு மண் மாதிரி போதுமானது ஆகும்.
மண் மாதிரி எடுக்கும் இடங்களில் இருக்கும் இலை தழைகளை எடுத்துவிடவேண்டும். மேல் மண்ணை அப்புறப்படுத்த கூடாது.
முதலில் மண்வெட்டி கொண்டு 15 செ.மீ. ஆழத்திற்கு ‘V’ வடிவத்தில் வெட்டவேண்டும். பின்னர் ‘V’ யின் இரு பக்கங்களிலும் மூங்கில் குச்சி அல்லது அலுமினிய கரண்டியால் மண்ணை சுரண்டி எடுக்கவேண்டும். இதுபோல் 10-15 இடங்களில் எடுக்கவேண்டும்.
சேகரித்த மண்ணை கால் பங்கிட்டு முறையில் 1/2 கிலோ மண் வரும் வரை பங்கீடு செய்து துணிப்பை அல்லது பாலித்தீன் பையில் சேகரிக்க வேண்டும்.
அந்த பையில் விவசாயியின் முழு முகவரி, பாசன வகை, கடந்த பருவத்தில் சாகுபடி செய்த பயிர் தற்போது சாகுபடி செய்ய உள்ள பயிர், சர்வே எண், வயல் பெயர், போன்ற விபரங்களை எழுதி வைக்க வேண்டும்.