1.. மஞ்சள் 10 மாதம் பயிர். நடவு செய்ததிலிருந்து 10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
2. உளவிற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 18 கிலோ பசுந்தாள் (சணப்பை) உரம் இடவேண்டும். சணப்பை, 2 கிலோ கம்பு, 4 கிலோ மக்காசோளம், 3 கிலோ சோளம் (குண்டு), 1 கிலோ கேழ்வரகு ஆகியவற்றை கலந்து நிலத்தில் தெளித்து விடவும். சணப்பை பூ வைத்து பிஞ்சு வரும்பொழுது மடக்கி உழுது விடவேண்டும்.
undefined
3. சணப்பை பயிரை உழுதுவிட்ட இரண்டு மாதம் கழித்து மஞ்சள் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் கிடைத்தால் இடலாம். தொழுவுரம் அவசியமில்லை, அவரவர் வசதிக்கேற்ப வேண்டுமானால் இடலாம்.
4. ஒரு அடி பார் போதுமானது, சிலர் ஒற்றையடி பார் பிடிப்பர். தங்களின் வசதிக்கேற்ப பார் பிடித்துக்கொள்ளுங்கள். பார் களின் ஓரங்களில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு விதை மஞ்சளின் அளவிற்கேற்ப 800 கிலோ முதல் 1டன் மஞ்சள் நடவிற்கு தேவைப்படும். நாற்று விட்டு நடுவதை விட கிழங்கை நேரடியாக நடும்பொழுது செலவுகள் குறையும்.
5. விதை நேர்த்தி செய்ய: நூறு அல்லது இருநூறு லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல் எடுத்து கொள்ளுங்கள். அதில் பத்து லிட்டர் பசு மாட்டு கோமியம், ஒன்றரை கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்புத்தூள், கால் கிலோ மஞ்சள் தூள், அரை கிலோ உப்பு. இவை அணைத்தையும் நன்றாக கலக்கி கொள்ளவும்.
மஞ்சள் கிழங்குகளை இந்த கரைசலில் பத்து நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு இதனை நேரடியாக நடவு செய்யலாம். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் வேர் சம்மந்தமான அணைத்து வியாதிகளையும் முற்றிலும் தடுக்கலாம்.
6. மஞ்சள் நடவு செய்த பிறகு தேவைப்பட்டால் மண்ணின் ஈரப்பத்திற்கேற்ப தண்ணீர் பாய்ச்சினால் போதும். மஞ்சளுக்கு தண்ணீர் நிலத்தில் தேங்க கூடாது.
7. அசோஸ் பயிரில்லம் 3 லிட்டர், பாஸ்போ பாக்டீரியா 3 லிட்டர், பொட்டாஸ் பாக்டீரியா 3 லிட்டர், VAM 20 கிலோ, zinc mobiliser 2லிட்டர் இவை அனைத்தையும் தேவையான அளவு தொழுவுரத்துடன் கலந்து கொள்ளுங்கள். ஒரு கிலோ உருண்டை வெள்ளம், இரண்டு லிட்டர் தயிர், மூன்று தேங்காய் ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும்.
தேங்காயை உடைத்து நன்றாக துருவி பால் எடுத்து கலந்து கொள்ளவும். இவை அணைத்தையும் தேவையான அளவு தொழுவுரத்துடன் கலந்து கொள்ளவும். கலந்த பிறகு இந்த கலவை உதிரியாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள் இல்லையெனில் நிலத்தில் தூவுவது சிரமமாக இருக்கும்.
8. இரண்டாவது தண்ணீர் பாய்ச்சிய பிறகு இந்த தொழுவுற கலவையை நிலத்தில் இடவேண்டும். நிலத்தில் கால் வைத்தால் கால் உள்ளே செல்லும் அளவிற்கு நிலத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
மாலை நேரத்தில் இந்த கலவையை நிலத்தில் இடுவது மிக சிறந்தது. சூரிய ஒளி மங்கிய பிறகு இடுவதால் 12 மணி நேரத்தில் (மறு நாளுக்குள்) இந்த கலவையில் உள்ள நுண்ணுயிர்கள் பல்கி பெருகிவிடும்.
9. ஒவ்வொரு முறை தண்ணீர் விடும்பொழுதும் தங்களின் வசதிக்கேற்ப பின்வருவனவற்றை கொடுக்கலாம். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ சாணம் (புதிய சாணம், பசு அல்லது எருமை மாடு), 10 லிட்டர் கோமியம் இதனை 200 லிட்டர் பேரலில் கலந்து கொள்ளவும்.
இதனுடன் 3 கிலோ வெல்லம், 3 கிலோ கடலை புண்ணாக்கு, 3 பப்பாளி பழம், 10 கனிந்த வாழைப்பழம், ஒரு பூசணி(பரங்கி) பழம் (கிடைத்தால்), ஒரு லிட்டர் தயிர். இவை அணைத்தையும் நன்றாக கூலாக கரைத்து சாணம், கோமியத்துடன் வாசல் தெளிக்கும் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் மெத்தைலோ பாக்டீரியா ஒரு பேரலுக்கு 250ml அல்லது 150ml கலக்கவும். இந்த கலவையுடன் 50 முதல் 60 லிட்டர் தண்ணீர் கலக்கவும். இதனுடன் 2 லிட்டர் மீன் அமிலத்தை கலந்து கொள்ளவும். பேரலின் வாயை துணியால் கட்டி மூடி நிழலில் வைத்து விடவும்.
10. 3 வது நாள் ஒருமுறை நன்றாக கலக்கிவிடவேண்டும். 7 வது நாளில் இருந்து இந்த அமிர்த கரைசலை பயன்படுத்தலாம். சொட்டுநீர் முறையில் விடுவதாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் கலந்து விடவும். பாசன நீரில் கலப்பதாக இருந்தால் நேரடியாக கலந்து விடலாம்.
11. வசதி இருந்தால் பின்வருவனவற்றை இந்த கலவையுடன் சேர்த்து பயிருக்கு கொடுக்கலாம்(ஒரு பேரல் அளவிற்கு). அசோஸ் பயிரில்லம் 150ml, பாஸ்போ பாக்டீரியா 150ml, பொட்டாஸ் பாக்டீரியா 150ml, VAM liquid, zinc mobiliser 250ml ஆகியவற்றை மேற்சொன்ன அமிர்த கரைசலுடன் கலந்து பயிர்களுக்கு கொடுக்கவும்.
இந்த கரைசலை ஒரு தண்ணீர் பாய்ச்சலுக்கு ஒரு பாய்ச்சல் இடைவெளி விட்டு கொடுத்தால் போதுமானது.
12. இதனால் நிலத்தின் மேல் இருந்து தாக்கும் அனைத்து பூச்சிகளையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். சார் உறிஞ்சும் பூச்சிகள், துரு போன்று இலையில் வரும் நோய்கள் மற்றும் வேர்அழுகல் நோயிலிருந்தும் இந்த அமிர்த கரைசல் பாதுகாக்கும்.
13. 10 நாட்களுக்கு ஒருமுறை கற்பூர கரைசல் தொடர்ந்து கொடுப்பதால் நல்ல பசுமையான இலைகள் கிடைக்கும். மீன் அமிலம் கற்பூரக்கரைசலுடன் ஒருமுறை விட்டு ஒருமுறை கலந்து கொடுப்பதால் அணைத்து வகையான பூச்சி தாக்குதலில் இருந்தும் மஞ்சளை பாதுகாக்கலாம்.
மேற்சொன்ன அனைத்தையும் கடைப்பிடித்து இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்வதால், இரசாயன முறையில் செய்வதைவிட இருமடங்கு லாபம் ஈட்டலாம்.