கீரை நமது உணவு வகைகளில் முக்கியமான ஒன்று. மருத்துவ குணங்கள் அணைத்து வகை கீரைகளிலும் மிகுந்து காணப்படுகிறது.
நாம் அன்றாடம் உணவில் உபயோகிக்கும் கீரைகளில் இரும்பு சத்து, கால்சியம் சத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்து உள்ளன.
மணத்தக்காளி கீரை சமீபகாலமாக அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மணத்தக்காளி கீரை எல்லா பருவத்திலும் பயிர் செய்யப்படுகிறது.
மணத்தக்காளி விதைகள், விதை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இரு முறைகளில் பயிர் செய்யப்படுகிறது, நாற்று விடுதல் மற்றும் நேரடியாக வயல்களில் விதைகள் தூவப்படுகின்றன. விதை மூலம் நடவு செய்யும்போது ஏக்கருக்கு ஐம்பது முதல் நூறு கிராம் விதை போதுமானது.
நாற்று விடுதல் மூலம் நடவு செய்யும்போது, நாற்று மேட்டு பாத்திகளில் விடப்பட்டு பின்னர் இருபதாம் நாள் பிடுங்கி நடப்படுகிறது. இரண்டு அடி இடைவெளி வரிசைக்கு வரிசை செடிக்கு செடி இருக்குமாறு நடவு செய்வது சிறந்தது.
தொழுஉரம் கடைசி உழவில் இட்டு பின்னர் நாற்று நடவேண்டும். தேவைப்பட்டால் ஒரு களை எடுக்கலாம்.
தேவையான உரங்கள் என்று பார்த்தால், இயற்கை கரைசல்களை நீர் பாய்ச்சும் போது கலந்து விடலாம். மீன் அமிலம் தெளிப்பதன் மூலம் விரைவான வளர்ச்சியை பெறலாம். மணத்தக்காளியில் பூச்சி தாக்குதல் சற்று குறைவுதான்.
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணம் என்னவென்றால் குடல் மற்றும் வாய் புண்களை ஆற்றும் சக்தி இந்த கீரைக்கு உண்டு. இந்த தேவைக்காக தான் மணத்தக்காளி பெரும்பாலும் பயிரிடப்படுகிறது.
மணத்தக்காளி நட்ட முப்பது நாளில் அறுவடை செய்யலாம். காலை வேளைகளில் அறுவடை செய்து கட்டுகளாக கட்டி சந்தைக்கு அனுப்ப படுகிறது.
அறுவடை செய்த இருபது நாட்களில் மறுபடி துளிர்த்துவிடும். அதனால் தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.