1.. கம்போஸ்ட் படுக்கையில் காற்றோட்டம் ஏற்படுத்துதல்
திடக்கழிவுக் குவியலில் தேவையான அளவு ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். இதற்கு அக்குவியல் காற்றோட்டமுடையதாக இருக்க வேண்டும். குவியலைப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிடுவதால், கீழுள்ள பொருட்கள் மேலும், மேலுள்ள பொருட்கள் கீழும் செல்கின்றன.
இவ்வாறு கலக்குவதால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு தூண்டப்பட்டு, மக்குதல் செயல் வேகமாக நடைபெறுகின்றது. சில சமயங்களில் காற்றோட்டம் ஏற்படுத்த பக்கவாட்டில் அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். மரத்துகள்களை பயன்படுத்துவதால் கழிவுகள் மேலும் காற்றோட்டம பெறுகின்றன.
2.. ஈரப்பதம் நிலைநிறுத்துதல்
மக்கிய உரம் தயாரிக்கும் போது, 60 சதவிகிதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், மக்கிய உரத்தின் ஈரப்பதத்தை குறையவிடக்கூடாது. கழிவுகளில் ஈரப்பதம் குறைவாக இருந்தால், அவைகளில் உள்ள நுண்ணுயிரிகளானது இறந்துவிட நேரிடும். இதனால் மக்கிய உரம் தயாரித்தல் நிகழ்வு பாதிக்கப்படும்.
3.. மக்கிய உரம் முதிர்வடைதல்
முதிர்வடைந்த மக்கிய உரத்தின் வெளிப்படை தோற்றமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், ஒவ்வொரு துகளின் அளவும் குறைந்தும் காணப்படும். மக்கிய உரம் முதிர்வடைதல் முடிந்த பிறகு, மக்கிய உரக்குவியலை கலைத்து தரையில் பரப்ப வேண்டும்.
அடுத்து ஒரு நாள் கழித்து மக்கிய உரமானது ஒரே அளவாக வருமாறு, 4 மி.மி. சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும். மக்கிய உரம் சலித்த பிறகு கிடைக்கும் மக்காத கழிவுகளை, மறுபடியும் உரம் தயாரிக்க பயன்படுத்துவதன் மூலம் மக்கிய உரம் தயாரித்தலானது முடிவடைகிறது.