நன்னீரில் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல்:
குளங்களில் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்னர் நாம் திட்டமிட்டு இருக்கக்கூடிய வளர்ப்பு காலம், குளங்களுக்கு நீர் கிடைக்கும் காலத்தின் அளவு தீவனத்தின் தன்மை மற்றும் எதிர்பார்க்கும் அறுவடை எடை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
வளர்ப்புக் காலம் சுமார் 10 மாதங்கள் என்று வைத்துக்கொண்டால் நாம் இடும் உரம் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம்.
மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 3 - 4 அங்குல நீளும் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது. தவிர சுமார் 6 மாத காலம் முதல் ஓராண்டு வயதான வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்ட குஞ்சுகளை எக்டருக்கு 5000 – 6000 குஞ்சுகள் இருப்புச் செய்யலாம்.
வளர்ப்புக் குளத்தில் அதிக காலம் பராமரிக்கப்பட்ட மீன்கள் இருப்புக் குளங்களில் இருப்புச் செய்யப்படும்போதே சுமார் 15 முதல் 20 செ.மீ நீளத்தையும் சுமார் 50 டுதல் 100 கிராம் எடையையும் அடைந்துவிடும்.
இத்தகைய வளர்ந்த குஞ்சுகள் சுமார் 3 முதல் 5 மாதங்களில் சராசரியாக ½ கிலோ எடைக்கும் அதிகமாக வளரும். எனவே நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகளைக் குளங்களில் இருப்புச் செய்யும்போது அவற்றை சுமார் 6 மாதங்களிலேயே அறுவடை செய்துவிடலாம்.
எனவே மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் கிடைக்கும் கால அளவு விற்பனைக்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு வளர்ப்புக் காலத்தை நிர்ணயிக்க் வேண்டும். மீன்களின் வளர்ப்புக்காலம் மற்றும் நாம் குளங்களுக்கு இடும் உரம் மற்றும் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு குஞ்சுகளின் இருப்படர்த்தியை நிர்ணயிக்க வேண்டும்.
குளங்களில் பல இன மீன்களை இருப்புச் செய்யும் போது இன விகிதாச்சாரம் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக முன்பு குறிப்பிடப்பட்டுள்ள பல இனக் கெண்டை மீன்களை இருப்புச் செய்யும்போது தாவர மற்றும் மக்கிய கழிவுகளை உண்ணும் மீன் இனங்களான வெள்ளிக்கெண்டை ரோகு, மிர்கால், மற்றும் சாதாக்கெண்டை போன்ற இனங்களை அதிக அளவில் இருப்புச் செய்தல் வேண்டும்.
புல் மற்றும் நீர்த்தாவரங்கள் நிறைந்துள்ள குளங்கள் மற்றும் புல் அல்லது காய்கறிக் கழிவு போன்றவற்றை கொடுக்க வாய்ப்புள்ள இடங்களில் புல் கெண்டையைச் சுமார் 5 விழுக்காடு இருப்புச் செய்யலாம்.