நன்னீரில் மீன் வளர்க்கும்போது குளங்களை எப்படி தயார் செய்யணும்?

First Published Mar 23, 2018, 11:30 AM IST
Highlights
How to prepare the ponds when growing fish in fresh water?


நன்னீரில் மீன் வளர்க்கும்போது குளங்களைத் தயார் செய்யும் முறை

மீன்களைக் குளங்களில் இருப்புச் செய்வதற்கு முன் குளங்களை முறைப்படித் தயாரிப்பது, மீன் வளர்ப்பில் இன்றியமையாத ஒரு அடிப்படைப் பணியாகும்.

மீன் வளர்ப்புக் குளங்களில் அதிக உற்பத்தியைப் பெறுவதற்குப் பண்ணை மேலாண்மை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்குக் குளங்களை முறையாகத் தயார் செய்தலும் முக்கியமாகும்.

மீன்வளர்ப்புக் குளங்களின் தயாரிப்பில் முக்கிய நிலைகள் பின்வருமாறு.

** குளங்களைக் காயவிடுதல்

** வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்

** உழவு செய்தல்

** சுண்ணாம்பு இடுதல்
 
1. குளங்களைக் காயவிடுதல்:

குளங்களில் மீன்களை அறுவடை செய்த பின்பு நீரை முழுமையாக வடித்துிவட்டு குளங்களின் அடிப்பகுதியில் வெடிப்புகள் உண்டாகும் அளவிற்கு குளங்களை வெயிலில் நன்றாகக் காயவிட வேண்டும்.

இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகள் மற்றும் சேற்றிலுள்ள நச்சுயிரினங்கள், போன்றவை அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன.

குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.

2. வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்:

குளங்களின் அடிப்பகுதியில் அதிகமான அளவிற்கு உரச்சத்துக்கள் இருப்பது குளங்களில் அதிக அளவில் பாசிபடர்வுகள் தோன்றி நீர் மாசுபடுவதற்கும் அடிப்பகுதியில் நச்சுத்தன்மை ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். எனவே குளங்கள் நன்றாக காய்ந்த பிறகு வண்டல் கலந்த மேல் மண்ணை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

3. உழவு செய்தல்:

குளத்தயாரிப்பில் அடுத்த கட்டமாக குளங்களை நன்றாக உழுதல் வேண்டும். சுமார் 10 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுவதால் அடிமட்ட மண் மேலே வருகிறது. இதனால் குளத்தரையின் கீழ் சேர்ந்துள்ள கழிவுகள் வெளிப்படுத்தப்பட்டு அவற்றிலுள்ள நச்சுயிரிகள் அழிக்கப்படுவதோடு நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன.

எனவே குளங்களை வருடம் ஒரு முறை நன்கு காயவிட்டு உழுவு செய்வதால் குளத்திலுள்ள மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டுத் தூய்மையடைகிறது.

4. சுண்ணாம்பு இடுதல்:

குளங்களுக்கு சுண்ணாம்பு இடுவுது பல்வேறு நல்விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீருக்கு போதுமான கார மற்றும் கடினத்தன்மைகளை அளித்தல், நச்சுயிரிகளை அழித்தல், குளத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் நச்சுத்தன்மைகளை குறைத்தல், நீருக்கு ஓரளவு நிலையான கார அமிலத்தன்மையை அளித்தல், மற்றும் நீரில் கலங்கல் தன்மையையும் பாசிப் படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்து அதிக அளவில் உயிர்வளி உற்பத்தி ஏற்படுதல் போன்றவை சுண்ணாம்பு இடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகளாகும்.

மீன் வளர்ப்புக்குளங்களுக்கு இட வேண்டிய சுண்ணாம்பின் அளவு மண்ணின் கார அமிலநிலை மற்றும் குளங்களில் சேரும் கழிவுகளின் அளவிற்கேற்ப மாறுபடுகிறது. மிதமான கார மற்றும் அமிலத்தன்மை கொண்ட மண்ணிற்கு ஏக்கருக்கு 80 முதல் 120 கிலோ கிராம் சுண்ணாம்பு பரிந்துரைக்கப்படுகிறது.

உழவு செய்தபின் குளங்களில் பரவலாக சுண்ணாம்பை தூவி விட வேண்டும். குளத்தின் பள்ளமான பகுதிகளிலும் வண்டல் கழிவுகள் அதிகம் சேரும் இடங்களிலும் அதிக அளவில் சுண்ணாம்பு இட வேண்டும்.

5. சாணம் கரைத்தல்:

குளங்களுக்குச் சுண்ணாம்பு இட்ட, ஒரு வாரத்திற்குப் பிறகு சுமார் 1 அடி வரை நீர் நிறைத்து, பின்னர் குளத்திற்கு அடியுரமாகச் சாணம் அல்லது கோழி எரு இடலாம். ஒரு எக்டர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 டன்கள் வரை சாணமோ அல்லது 5 டன்கள் என்ற அளவில் கோழி எருவோ இட வேண்டும்.

சாணத்தைப் பொறுத்த மட்டில் உலர்ந்த சாணத்தைவிட மட்கிய அல்லது ஈரமான சாணம் மேலானது. கோழி எருவைப் பொறுத்த மட்டில் மக்கிய ஆழ்கூள எரு (Deep Litter) நல்லது. மொத்தப் பரிந்துரையில் 6ல் ஒரு பங்கை அடியுரமாக நீரில் நன்கு கரைக்க வேண்டும். மொத்த அளவில் ஆறில் ஒரு பங்கை அடியுரமாக இட்ட பின் மீதத்தை வளர்ப்புக் காலத்தில் குளங்களுக்கு பகிர்ந்து மேலுரமாக இடலாம்.

 

click me!