ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது கால் ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம்.
குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள் தோண்டி கரை அமைக்கப்பட்ட குளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம்.
இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது. இத்தகையக் குளங்களின் பயன் என்னவெனில் பிற்காலத்தில் மீன் வளர்ப்புத் தொழிலைத் தற்காலிகமாக மாற்ற நினைத்தால் கரை மண்ணை குளத்தினுள் நிரப்புவதன் மூலம் விவசாய நிலமாக மாற்றிவடலாம். வயல்களில் அமைக்கப்படும் மீன்வளர்ப்புக் குளங்கள் பெரும்பாலும் இந்த வகையினைச் சார்ந்ததே.
மீன் வளர்ப்புக் குளங்கள் அமைக்கும் போது கரை அமைக்கத் தேவையான அளவிற்குக் குளத்திலிருந்து மண் எடுத்து அதனை சுற்றுப்புறக் கரை அமைக்கப் பயன்படுத்த வேண்டும். குளங்களின் கரைகளை அமைக்கும் போது நீர் உள்(வரத்து) மடை மற்றும் நீர் (வெளியேற்ற) வடிமடை போன்ற அமைப்புக்கள் அமைப்பது நல்லது.
பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறு வகை கொண்ட பண்ணைகளில் நிலத்தடி நீர் குழாய் மூலமே பாய்ச்சப்படுகிறது. அதனால் அத்தகைய சூழல்களில் உள்வரத்துக் குழாய்களுக்கு தடுப்பு வலைகள் தேவையில்லை. ஆயினும் குளம், ஆறுகள், கால்வாய், போன்ற வெளிநீர் நிலைகளிலிருந்து நீர் எடுத்து மீன்வளர்ப்புக் குளங்களுக்குப் பாய்ச்சும் போது உள்வரத்துக் குழாய்களிலும் கண்டிப்பாக தடுப்பு வலைகள் வைக்க வேண்டும்.
இது தவிர அனைத்து குளங்களிலும் வடிமடை குழாய்களுக்கு தடுப்பு வலைகள் அத்தியாவிசியமான ஒன்றாகும். குளம் அமைக்கும் போது குளத்தின் அடித்தளத்தை மேடு பள்ளமின்றி வடிமடைப்பகுதியை நோக்கி சிறிதளவு சரிவுடன் (1:300 என்ற விகிதாச்சரத்தில்) அமைத்தல் வேண்டும்.
இதனால் தேவையான போது குளத்துநீரை வடிப்பது எளிதாகும். அதுமட்டுமின்றி குளங்களின் அடிமட்டத்தில் சேரும் கழிவுகளும் குளம் முழுவதும் பரவாமல் வடிமடை பகுதியிலேயே அதிகமாக சேரும்.
குளத்தின் கரை அமைக்கும் போது கரையின் உயரத்தை குளத்தில் தேக்க இருக்கும்அதிகபட்ச நீர் மட்டத்தை விட குறைந்த பட்சம் 1½ அடி உயரம் அதிகமாக இருக்குமாறு அமைத்திட வேண்டும்.
குளம் வெட்டும் போது கரையின் பக்கச்சரிவுகளை மண்ணின் தன்மைக்கேற்ப கரையின் உயரம் மற்றும் சாய்தளத்தின் அடிப்பகுதியின் அகலம் 1: 1½ அல்லது 1:2 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும்.
தேவையான அளவுக்குக் களித்தன்மை கொண்ட நிலங்களில் 1: 1½ என்ற விகிதம் போதுமானது. கரையின் வெளிப் பக்கச் சரிவினை மண்ணின் தன்மைக்கேற்ப 1:1 அல்லது 1: 1½ என்ற விகிதத்தில் அமைத்துக் கொள்ளலாம். குளத்தின் ஆழம் 6 முதல் 8 அடி அளவிற்கு இருப்பது நல்லது.
கரையின் மேற்பகுதியின் அகலம் 4 முதல் 6 அடி என்ற அளவில் இருப்பது நல்லது. பண்ணையின் சுற்றுப்புறக் கரை வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, கூடுதல் அகலத்துடன் அமைக்கப்படுதல் வேண்டும். குளங்கள் அமைப்பதற்கு வேலையாட்களை பயன்படுத்துவதை விட இயந்திரங்களை பயன்படுத்தும்போது செலவுகள் குறையும்.
சற்று அதிக பரப்பளவில் மீன் பண்ணைகளை அமைக்கும் போது மீன் வளர்ப்புக்குளம் அதாவது இருப்புக்குளம் மட்டுமின்றி நுண்மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் மற்றும் இளம்மீன் குஞ்சுகள் வளர்ப்புக் குளம் போன்றவற்றையும் பண்ணைகளில் அமைத்துக் கொள்ளலாம், இத்தகைய குளங்களை 0.1 ஏக்கர் பரப்பளவு முதல் 0.25 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் 5 முதல் 6 அடி ஆழம் கொண்டவையாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
இத்தகைய குளங்கள் நமது பண்ணைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை குறைந்த செலவில் தட்டுப்பாடின்றி நமது பண்ணையிலேயே வளர்க்கவும். விற்பனை எடையை அடையாத நிலையிலுள்ள மீதமான மீன்களை பராமரிக்கவும் உதவும்.