கொடி ஆடுகள்
இவை தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைப்பர்.
கன்னி ஆடுகள்
இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்பர்.
சேலம் கருப்பு
இந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை. இவை பொதுவாக இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.