மொச்சையினப் பயிர்கள்
1.. குதிரை மசால்
இது மிகச் சிறந்த பசுந்தீவனமாகும். இதனைப் பசுமையாகவும், காயவைத்தும் ஆடுகளுக்கு அளிக்கலாம். ஆனால் குதிரை மசால் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நன்கு வளர்வதில்லை.
கோவை, பெரியார், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில பகுதிகளில் குதிரை மசால் பலன் கொடுக்கின்றது. மற்ற மாவட்டங்களில் இது பயிரிட ஏற்றதில்லை.
இது ஒரு பல்லாண்டுப் பயிர்.இதை விதைக்க ஏற்ற காலம் அக்டோபர் – நவம்பர் மாதமாகும். ஒரு எக்டேருக்கு 15 முதல் 20 கிலோ விதை தேவைப்படும்.
இதனை 20-25 செ.மீ., இடைவெளியில் வரிசையாகப் பயிரிடலாம். அல்லது தூவி விதைத்து விடலாம். வாரம் ஒரு முறை முதல் கட்டாயமாகவும், பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
தழைச் சத்து 30 கிலோ, மணிச் சத்து 100 கிலோ தேவை. 70 நாட்களுக்குப் பின் முதலட அறுவடையும், பின் 25 - 30 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
ஆண்டில் 6 முதல் 7 தடவை அறுவடை செய்து, 60 முதல் 70 டன் பசுந்தீவனம் பெறலாம். புரதம் 20% அளவில் இப்புல்லில் உள்ளது.
2.. ஸ்டைலோ
இப்பயிரைக் குதிரை மசால் பயிரிட முடியாத மற்ற இடங்களில் பயிரிடலாம். ஒரு எக்டேருக்கு 20-25 கிலோ விதை தேவைப்படும்.
வரிசைக்கிடையே 30 செ.மீ., இடைவெளி கொடுக்க வேண்டும். தழைச் சத்து 30 கிலோவும், மணிச் சத்து 60 கிலோவும் தேவை.
கோடையிவ் 20-30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். முதல் அறுவடை 65-70 நாட்களிலும், பின் 35-45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
ஆண்டில் 3 முதல் 5 முறை அறுவடை செய்து 30 முதல் 35 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லில் புரதம் 18-20% அளவில் உள்ளது.
3.. வேலிமசால்
இது வெள்ளாடுகளுக்கு ஒரு சிறந்த பசுந் தீவனப் பயிராகும். இதைத் தென்னந்தோப்பு, வாழைத் தோட்ட ஓரங்களிலும் பயிரிடலாம்.
தனிப்பயிராக எக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். 1 மீட்டர் இடைவெளி விட்டு, அடுத்த வரிசை விதை போட வேண்டும். 30 கிலோ தழைச் சத்தும், 50 கிலோ மணிச் சத்தும் தேவை. கோடையில், 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
அரை முதல் 1 மீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பயிர் செய்த 4 மாத வயதில் முதல் அறுவடைக்குத் தயாராகும்.
பின் 1 முதல் 1 1/2 மாத இடைவெளியில், அறுவடை செய்யலாம். ஆண்டிற்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து 18 முதல் 20 டன் பசுந்தழை பெறலாம்.
இப்புல்லின் புரத அளவு 18 – 20% ஆகும். இதனை கோ-1 மற்றும் கினி புல்லுடன் ஊடு பயிராகவும் பயிரிடலாம். இதனால் ஒன்றுன்கொன்று உதவி செய்து, அதிக மகசூல் பெற முடியும்.
இது தவிரச் சணப்புப் பயிரை நெல் அறுவடைக்குப் பின் பயிரிட்டு ஆடுகளுக்குப் பசுந்தழையாகவும், காய்ந்த தீவனமாகவும் அளிக்கலாம். இதுபோல் தட்டைப் பயற்றை மழைக்குப்பின் புஞ்சை நிலங்களில் விதைத்து ஆடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.
தவிரவும், பயிர் செய்ய பயனற்ற தரிசு நிலங்களில் கொழுக்கட்டை (Buffel Grass) அல்லது மலை அருகம்புல் (Rhodes Grass) விதைக்கலாம். சுற்றி வேலிக்கருவை நட்டுக் காக்கலாம். ஒரு ஏக்கல் நிலத்தில் பசும்புல்லையும், துவரை இனத் தீவனத்தையும் வளர்த்தால், 30 ஆடுகளையும் அதன் குட்டிகளையும் வளர்க்க முடியும்.
குறிப்பிட்டுச் சொல்லுவதானால், கோ-1 புல், வேலிமசால் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் பயிரிட்டுச் சுற்றிலும் அகத்தி, சித்தகத்தி மரம் நட்டுத் தேவையான பசுந்தழை பெற்று, 30 வெள்ளாடுகளைப் பேண முடியும்.