வெள்ளாடுகளுக்கு உகந்த புற்கள்
வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது.
கோ- 1 கலப்பின நேப்பியர் புல்
நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் உற்பத்தியாகும். இவ்வகைப் புல்லைச் சிறிது சிறிதாக நறுக்கி, வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்க வேண்டும்.
பெரிய பண்ணையாளர்கள் தட்டை வெட்டும் கருவியைக் (Chaff Cutter) கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
மின்சாரத்தில் இயங்கும் தட்டை வெட்டும் கருவியையும் பல பண்ணையாளர்கள் வைத்துள்ளார்கள்.
கோ-2
சாகுபடிக் குறிப்புகள்
33% அதிக மகசூல் கொடுக்கக்கூடிய இது எக்டேருக்கு 30,000 புல் துணுக்குகள் தேவைப்படும். 30-75 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்துப் புல் துணுக்குகளை நட வேண்டும்.
150 கிலோ தழைச் சத்தும், 60 கிலோ மணிச் சத்தும் ஒரு எக்டேர் பயிருக்குத் தேவை. இப்புல்லுக்குத் தொடர்ந்து நீர் அளிப்பது தேவை. ஆகவே, நல்ல பாசன வசதிக்கு ஏற்ற இறைவை இயந்திரம் அவசியம்.
மழைக் காலத்தில் மழைக் காலத்தில் மழை பெய்யும் சூழ்நிலையைப் பொறுத்து, 15-20 நாளுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சலாம். கோடைக் காலத்தில் 8-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
நட்ட 60 முதல் 75 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இவ்வாறாக, ஆண்டிற்கு 5 முதல் 6 முறை அறுவடை செய்து 150 முதல் 200 டன் பசும்புல் பெறலாம். இதில் புரதம் 8% உள்ளது.
கினிபுல் – அமில்வகை
இதுவும் ஒரு சிறந்த புல் வகையே. இது ஓரளவு நிழலைத் தாங்குவதால், தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களில் பயிரிடலாம்.இதனைப் புல் துணுக்குகளாகவோ, விதை மூலமாகவோ பயிரிடலாம்.
எக்டேருக்கு 30-35,000 புல் துணுக்குகள் அல்லது 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகின்றன. வரிசைக்கு 45 முதல் 60 செ.மீ., இடைவெளி தேவை. 50 முதல் 60 நாட்களில் முதல் அறுவடையும், பின் 40-45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
எக்டேருக்கு 100 முதல் 150 டன் வரை ஓராண்டில் கிடைக்கும் இப்புல்லில் புரதம் 7% அடங்கியுள்ளது.
எருமைப்புல்
இது வெள்ளாடுகளுக்கு ஏற்ற சிறிய வகைப் புல். பொதுவாகச் சாக்கடைக் கழிவு நீர் மூலம் பல நகராட்சிகளில் இது பயிரிடப்படுகின்றது.45-60 செ.மீ., இடைவெளிவிட்டு வரிசையாக நடலாம். புல் துணுக்குகள் மூலமே பயிரிட வேண்டும்.
உர அளவு கோ-1 போன்றே. இதற்கு அதிக நீர் தேவை. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மழைக் காலத்திலும், 8-10 நாட்களுக்கு ஒரு முறை கோடைக் காலத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
முதல் அறுவடை 75 முதல் 80 நாட்களிலும், பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஒரு எக்டேரில் 80 முதல் 100 டன் புல் கிடைக்கும். இதில் அடங்கியுள்ள புரத அளவு 7% ஆகும்.