பாக்டீரியா இலை நோயை கட்டுப்படுத்த கோசைடு 101 என்ற மருந்தை 2.5 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவும்.
இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மான்கோசாப் 2.0 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 2 முறை, நட்ட 40, 55 நாள்களுக்குப் பின்னர் பயிர்களில் தெளிக்கவும்.
நெல் வயல்களில் பூச்சி மேலாண்மை: இலை சுருட்டுப்புழு: தற்போது நிலவும் தொடர் மழை, பனிமூட்டமான காலநிலை காரணமாக நெல்லில் இலை சுருட்டுப் புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது.
இளம் பயிர்கள், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களைத் தாக்கும் இந்த புழுக்கள், இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும்.
இப்பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயம் தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். வயலில் இப்புழுவின் அந்தி பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து விளக்கு பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
தாவர பூச்சிக் கொல்லியான அசாடிரக்டீன் 0.03 சதக் கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம். ரசாயன பூச்சிக் கொல்லிகளான கார்ட்ப் 50 சத பெளடர் 400 கிராம் ஏக்கருக்கு (அல்லது) குளோர்பைரிபால் 20 சதவீதம் 500 மில்லியை, ஏக்கருக்கு என்ற அளவில் உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.