கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும்.
முக்கிய பராமரிப்பு உத்திகள்:
** சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
** சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
** கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
** ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.