கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மையை மேற்கொள்வது எப்படி?

 |  First Published Sep 12, 2017, 12:04 PM IST
How to manage feed management in poultry farming



கோழி வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு

கோழி வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீன வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும். கோழிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது.

Latest Videos

undefined

இவை நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களே ஆற்றலுக்கு பிரதானமானவை. கொழுப்பில் கார்போஹைட்ரேட் விட 2.25 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது. மேலும் இதில் லினோலெயிக், லினோலெனிக், அராக்கிடியோனிக் அமிலம் போன்ற இன்றியமையாத கொழுப்பு அமிலங்களும் உள்ளன. அமினோ அமிலத் தேவையினைப் பூர்த்தி செய்யப் புரதம் அவசியம் ஆகும்.

அமினோ அமிலங்கள்

அர்ஜினைன், கிளைசின், ஹிஸ்டிடின், லியூசின், ஐசோலியூசின், லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், ஃபினைல் அலனின், த்ரியோனைன், டிரைப்டோபன் மற்றும் வெலைன் இவற்றில் மிக முக்கியமாகத் தேவைப்படுபவை அர்ஜினைன், லைசின் மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் டிரிப்டோபன்.

விட்டமின்களும், தாது உப்புக்களும் ஆற்றலை அளிக்கவில்லை எனினும் உடல் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

முக்கிய தாதுக்கள்

கால்சியம்,  பாஸ்பரஸ், சோடியம், தாமிரம், ஐயோடின், இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம்.

விட்டமின்கள்

விட்டமின் ஏ, விட்டமின் டி3, விட்டமின் ஈ, பைரிடாக்ஸின், ரிபோஃபிளேவின், பேன்டாதொனிக் அமிலம், நியாசின்ஃபோலிக் அமிலம் கோலைன்.மேற்கண்ட ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டும். சரிவிகித உணவே சிறந்த வளர்ச்சிக்கும் அதிக உற்பத்திக்கும் வித்தாகும்.

தீவனக் கூட்டுப் பொருட்கள்

பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீனியாகக் கொடுக்கலாம்.

மேலும் விலங்கு, காய்கறிப் புரதங்களான மீன் தோல்க்கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித்தீவனமாகப்  பயன்படுத்தலாம். இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.

இந்த தீவனப் பொருட்களை கூட பயன்படுத்தலாம்.

1.. சோளம்

இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில்  நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம்.

2. பார்லே

இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

3. ஓட்ஸ்

ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகிதம அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் வரும், கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளைக் குறைக்க முடியும்.

4. கோதுமை

சோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.

5. கோதுமை தவிடு

இது மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

6. கம்பு

கோதுமை போலவே நல்ல ஆற்றல் வழங்கியாக இது செயல்படுகிறது.

7. அரிசி

உடைந்த அரிசி குருணைகள் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரரேட் மிகுந்துள்ளது.

8. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி

இது ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகையால் 50 சதவிகிதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் சிறிது எண்ணெய்ச் சத்தும் உள்ளது. சரியாக பராமரிக்கப்படவில்லை எனில் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும். 

9. எண்ணெய் நீக்கப்பட்ட பாலிஸ் அரிசி

எண்ணெய் நீக்கப்பட்டதால் இதில் கொழுப்புச் சத்துக் குறைவே. எனினும் சாம்பல் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

10. வெள்ளைச் சோளம்

இது மஞ்சள் சோளம் போன்றே ஊட்டச்சத்துக்களைப் பெற்று இருந்தாலும் அதை விட வெள்ளைச் சோளத்தல் புரதம் அதிகம். கோழிகள் விரும்பி உட்கொள்ளும். மேலும் இதில் சில அமினோ அமிலங்கள் புண்ணாக்கில் இருப்பதைக் காட்டில் அதிக அளவில் உள்ளன.

11. கடலைப்புண்ணாக்கு

இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. 40 சதவிகிதம் வரை தீவனக் கலவையில் பயன்படுத்தலாம்.

12. மீன் தூள்

இது ஒரு சிறந்த கோழித்தீவனம். இதில் விலங்குப் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்பு மீனா அல்லது கலனில் அடைத்த மீனா என்பதைப் பொறுத்து பயன்படுத்தும் அளவு வேறுபடும். இந்திய மீன் துகள்களில் 45-55 சதவிகிதம் புரதம் உள்ளது. மீனில் செதில்கள் இருந்தால் தீவனத்தரம் குறையலாம். எனவே செதில்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

13. சுண்ணாம்புக்கல்

இது சுண்ணாம்புச் சத்து அதாவது கால்சியம் மிகுந்தது. எனினும் 5 சதவிகிதம் மேல் சேர்க்கக்கூடாது.

14. கடற்சிப்பி ஓடு

இதில் 38 சதவிகிதம் வரை கால்சியம் இருப்பதுடன் சுவை மிகுந்தது. சுண்ணாம்பிற்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது.

click me!