பால் உற்பத்தியின்போது சுகாதாரத்தைப் பின்பற்றும் வழிகள்
1.. பால் கறக்கும் முறை
பசுக்கள் இடப் பக்கத்திலிருந்தே பால் தரும் இயல்புடையவை. இவற்றின் மடியில் பால் கறக்கும்போது முன்னிரு, பின்னிரு காம்புகளிலோ அல்லது பக்கங்களில் உள்ள காம்புகளிலோ இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கறப்பது நல்லது.
முதல் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இத்துளிகளில் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
இரு விரல்களை பயன்படுத்தியோ, முழு விரல்களையும் பயன்படுத்தியோ பால் கரக்கலாம். இரு விரல் முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் தந்து கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்கலாம்.
முழு விரல்களைப் பயன்படுத்தும்போது, ஒரு கை விரல்களால் காம்பினைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் கன்றுக்கு ஊட்டுவது போல் எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம் ஏற்பட்டு பால் கறக்கும்.
இருவிரல் முறையில் ஒரே அழுத்தம் கிடைக்காது என்பதால் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காம்புகள் மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே இருவிரல் முறையைப் பயன்படுத்துவது நல்லது.
மிக முக்கியமாக ஈரமான கைகளால் பால் கறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சுத்தமான பால்:
பசுவின் மடியில் அதிகம் அழுக்கு சேரும். எனவே பால் கரப்பதற்கு முன் மடியை நன்றாக கழுவ வேண்டும்.
பால் காம்புகளும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். முடிந்தால் நல்ல துணி மூலம் கழுவிய மடியை துடைப்பதும் நல்லது. ஒருமுறை பயன்படுத்தும் கைதுடைப்பு காகிதங்களை பயன்படுத்துவது சிறந்தது.
பால் கறக்கும்போது உரோமங்கள் பாலில் விழுவதைத் தவிர்க்க அவ்வப்போது குளிப்பாட்டும்போது நன்கு தேய்த்து உடலில் உதிரும் ரோமங்களை அகற்ற வேண்டும். மாட்டுச் சாணத்தால் ஈக்கள் மொய்க்கும்.
எனவே மாட்டுத் தொழுவம் அவ்வப்போது கிருமிநாசினியால் கழுவப்படுவதன் மூலம் அப்பகுதி சுகாதாரத்தைப் பேண முடியும். முக்கியமாக பால் கரக்கும் பாத்திரம் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
கொதிக்கும் நீரை பால் கறக்கும் பாத்திரத்தில் ஊற்றினால் 2 நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து பாத்திரம் சுத்தமாகிவிடும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பை தவிர்த்து சுத்தமான பாலை நுகர்வோருக்கு அளிக்க முடியும். பால் கெடாத தன்மை நீண்டநேரம் நீடிக்கும்.
மாடுகளுக்கும், தொழுவம் முழுவதும் அவ்வப்போது சாம்பிராணி போடுவதன் மூலம் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.
மாட்டுத் தொழுவத்தின் மிக அருகே தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். எனவே மாட்டுத் தொழுவம் சற்று மேடான இடத்தில் அமைவது நல்லது.
பால் கறக்கும்போது மணம் வீசும் தீவனங்களை மாடுகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் பாலில் அந்த வாடை எளிதில் தொற்றிக் கொள்ளும்.
மாடுகளை பராமரிப்போர், பால் கறப்போர் காச நோய், டைஃபாய்டு, டிப்தீரியா போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக மாடுகளிடம் நெருங்கக் கூடாது. இது மாடுகளுக்கும், சுகாதாரமான பால் கறவைக்கும் நல்லது.
பால் கறப்பவர்கள் கண்டிப்பாக விரல் நகங்களை வெட்டி, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.