இனங்கள்
குருவுக்கோழி, பெருவிடைக்கோழி, சண்டைக்கோழி, கருங்கால் கோழி, கழுகுக்கோழி, கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி ஆகிய இனங்கள் உள்ளன.
உயர்ரக கோழி இனம்
நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு, வனராஜா, கிரிராஜா, சுவர்ணதாரா ஆகியவை உயர்ரக கோழி இனம் ஆகும்.
வீட்டு மேலாண்மை
கோழியானது பண்ணை மூலமாகவும், பண்ணை இல்லாமலும் வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக்கோழி வளர்ப்பை கூண்டு முறை, கூண்டு இல்லா முறை என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காகவும், கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காகவும் பயன்படுகிறது.
கட்டற்ற கோழி வளர்ப்பு
இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழி வளர்ப்பு மேற்கொள்ளலாம். இதில் கோழிகளின் நடமாட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும்.
கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன.
கூண்டு முறை
முட்டைக்கோழிகளை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். இந்த 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும்.
கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.
கூண்டு இல்லா முறை
இம்முறைக்கு அதிக இடம் தேவைப்படும். இதில் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற பொருட்களால் அமைக்க வேண்டும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுமே காணப்படும். முட்டை உற்பத்தியானது கூண்டு முறையை விட குறைவாக இருக்கும்.