கார்த்திகை பட்டத்தில் மானாவாரி பயிராக கோ.4, மார்டன் ஆகிய இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ்.எச் - 1, கே.பி.எஸ்.எச் - 44, டி.சி.எஸ்.எச் - 1 ஆகியவை சூரியகாந்தி இரகங்களும் ஏற்றவை.
மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக பயிரிட கோ.4, மார்டன் ஆகிய இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ்.எச் - 1, கே.பி.எஸ்.எச் - 44, எம்.எஸ்.எப்.எச் - 17 ஆகியவை ஏற்றவை.
இரகங்கள்:
மானாவாரி 7, இறவை 6
வீரிய ஒட்டு இரகங்கள்:
மானாவாரி 5, இறவை 4
விதை நேர்த்தி:
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டைசிம் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சாண விதை நேர்த்தி செய்யவும்.
விதைப்பதற்கு முன் ஒரு ஹெக்டேருக்கான விதைகளை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 3 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து 15 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து விதைக்கவும்.
விதைப்பு:
ஒரு குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் 3 செ.மீ. ஆழத்தில் பாரின் பக்கவாட்டில் விதைக்கவும். பின்பு 10-ஆம் நாள் செழிப்பாக உள்ள ஒரு செடியை நிறுத்தி, மற்றதை களைத்து விடவும்.
பயிர் இடைவெளி:
வீரிய ஒட்டு இரகங்கள் – 60 செ.மீ. x 30 செ.மீ., இரகங்கள் – 45 செ.மீ. x 30 செ.மீ.
களை நிர்வாகம்:
ப்ளுக்குளோரலின் விதைத்த 5 ஆம் நாள் அல்லது பென்டிமெத்தலின் விதைத்த 3 ஆம் நாள் 2 லிட்டர் / ஹெக்டேருக்கு தெளித்தபின் நீர் பாய்ச்சுதல் வேண்டும்.
களைக்கொல்லி இட்டபின் 30-35 ஆம் நாளில் ஒரு கை களை எடுக்க வேண்டும்.
களைக்கொல்லி பயன்படுத்தாத நிலையில் விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாள் கை களை எடுக்க வேண்டும்.
உர நிர்வாகம்:
ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் அடியுழவில் இடவும். இரசாயன உரங்களில் வீரிய ஒட்டு இரகங்களுக்கு இறவையில் ஹெக்டேருக்கு 60:90:60 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தும் மானாவாரியில் ஹெக்டேருக்கு 40:50:40 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தும் இடவும்.
இரகங்களுக்கு இறவையில் ஹெக்டேருக்கு 60:30:30 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தும், மானாவாரியில் ஹெக்டேருக்கு 40:50:40 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தும் இடவும்.
உயிர் உரம் இடுதல்:
ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன் இடவும்.
நுண்ணூட்ட உரம் இடுதல்:
எக்டேருக்கு 12.5 கிலோ சூரியகாந்தி நுண்ணூட்ட உரக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் சாலில் இடவும்.
மணிகள் பிடிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள்:
இடைக்கால பூக்கும் பருவத்தில் மகரந்த சேர்க்கைக்காக காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்குள் கையில் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையும் தேய்க்க வேண்டும்.
எட்டிலிருந்து பத்து நாட்களுக்கு ஐந்து முறை இவ்வாறு செய்ய வேண்டும்.
அல்லது அருகருகே உள்ள பூக்கொண்டைகளை ஒன்றோடு ஒன்று முகம் சேர்த்து இலேசாக தேய்க்க வேண்டும்.
ஹெக்டேருக்கு 5 தேனிப்பெட்டி வைப்பதால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு விதை பிடிப்பு அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.