ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோண்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல்.
அவற்றில் சில, “உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?
தமிழனோட நாகரிகம் தாவரத்தோட இணைஞ்சே இருந்திருக்கு. ஊர்ப் பெயர்கள்ல கூட மரங்களின் பெயரை வச்சு அழகு பார்த்திருக்காங்க நம் முன்னோர்கள். அவ்வளவு செழிப்பா இருந்த பூமி இது.
‘உசில்’ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி.
‘இலுப்பை’ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர்,
‘விளாமரம்’ இருந்த இடம் விளாத்திகுளம்,
‘வாகை’ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம்…
இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்கள்ல மரங்கள் இருக்கு. ஆனா, இன்னைக்கு அந்தந்த ஊர்கள்லயே அந்த மரங்களைக் காணோம்.
நம்மால் மறக்கப்பட்ட மரங்களின் மருத்துவ மகத்துவங்கள்..
‘‘உசில்” மரம் வறட்சியைத் தாங்கி வளரும். எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.
“வேங்கை” மரம் இன்னைக்கு அரிதாகிப் போச்சு. இந்த மரத்துல ஒரு குவளை செஞ்சு, அதுல தண்ணி ஊத்தி வச்சா, கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியைக் குடிச்சா சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேதத்தில் இதைப் பயன்படுத்துறாங்க. மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைத் தடுக்கும் மருந்து தயாரிக்கற ஆராய்ச்சி நடக்குது.
“இலுப்பை” மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாசாரத்துல ரொம்பக் காலமா விளக்கேத்த பயன்பட்டிருக்கு. இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.
“தோதகத்தி” மரத்துல எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள்ள மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்துல கண்டுபிடிச்சாங்க. அங்க தோதகத்தி மரத் துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க. ஆனா, இப்ப இது அரிதாகி வர்ற மரம்ங்கிறதால, தமிழக அரசு இதை வெட்ட தடை செஞ்சிருக்கு.
இப்படி இன்னும் நாம் மறந்த, நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட மரங்கள் நெறைய இருக்கு.