பட்டுப்புழு இவ்வளவு நோய்களால் தாக்கப்படுவதால்தான் அதன் மகசூல் பெரும் இழப்பை சந்திக்கிறது…

First Published May 16, 2017, 12:05 PM IST
Highlights
The silkworm is being hit by so many illnesses that its yields suffer a great loss ...


பட்டுப்புழுவை பல்வேறு நோய்கள் தாக்குவதால்தான் அதில் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

வருடம் முழுவதும் புழுக்களை வளர்ப்பதனாலும், சீதோஷ்ண நிலை காரணமாகவும், பட்டுப்புழுவை மிக எளிதில் நோய்க் கிருமிகள் தாக்குகின்றன.

பெரும்பாலும் பட்டுப்புழுவை வைரஸ், பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் பெப்ரைன் நோய்கள் தாக்குகின்றன. இதனால் 30-40 சதம் வரை கூடு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

1.. கிராஸரி நோய்

வைரஸ் நோய்களுள் அதிகமாகத் தென்படக்கூடிய நோய், கிராஸரி ஆகும். இந்த நோய்க் காரணமாக தமிழகத்தில் 15 சதவிகிதமும், கர்நாடகாவில் 34 சதவிகிதமும் கூடு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்

புழுவின் தோல் மினுமினுப்புடனும், எண்ணெய்த்  தன்மையுடனும் காணப்படும்.

புழுக்கள் அமைதி இழந்து அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும்.

கால்கள் பிடிமானத்தை இழப்பதனால் புழுக்கள் தலைகீழாகத் தொங்கும்.

நோயின் தோலானது மெலிந்து உறுதியிழந்து காணப்படுவதோடு தோலிலிருந்து நோய்க் கிருமிகளைக் கொண்ட வெள்ளைத் திரவம் வெளிப்படும்.

இளம்புழுக்கள் பாதிக்கப்படின் நான்கு முதல் ஐந்து நாட்களிலும், வளர்ந்த புழுக்கள் தாக்கப்படும்பொழுது 5 முதல் 7 நாட்களிலும் இறப்பு நேரிடுகிறது.

நோய் மேலாண்மை

2.5 சதம் பார்மலின், 0.5 சதம் நீர்த்த சுண்ணாம்பு (அ) பி.பி.எம் க்ளோரின் டை ஆக்ஸைடு, 0.5 சதம் சுண்ணாம்பு கரைசல் கொண்டு புழு வளர்ப்பு அறையைக் கிருமி நீக்கம் செய்தல்வேண்டும்.

புழு வளர்ப்புத் சாதனங்களை 2 சத ப்ளீச்சிங் பவுடர் + 0.3 சதம் நீர்த்த சுண்ணாம்பு கரைசலில் ஊறவைத்து பின்னர் வெய்யிலில் காய வைத்தல் அவசியம்.

நோய்வாய்ப்பட்ட புழுக்களை அப்புறப்படுத்தவும்.

புழு வளர்ப்பிற்கு ஏதுவான தட்பவெப்பம் மற்றும் ஈரத்தன்மையை ஏற்படுத்துதல்.

வளர்ப்பு மனைக்குத் தகுந்த புழு எண்ணிக்கை மற்றும் சரியான முறையில் படுக்கையை சுத்தம் செய்வதன் மூலம் நேய் பரவுதலைத் தடுக்கலாம்.

வளர்ந்த புழுக்களுக்கு கொழுந்து இலை கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது.

படுக்கை கிருமி நாசினிகளை 100 முட்டைத் தொகுதிகளுக்கு 4 கிலோ என்ற அளவில் புழுக்களின் மீது ஒவ்வொரு தோலுரிப்பதற்குப் பின்னரும் ஐந்தாம் பரவப் புழுக்களின் நான்காவது நாளிலிலும் தூவவேண்டும்.

2. பாக்டீரியா நோய்

பேசிலஸ், பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ், ஸ்டெப்டோகோக்கஸ், ஸ்டெபைலோகோக்கஸ், சூடோமோனாஸ், அக்ரமோபாக்டர் முதலிய பல்வேறு வகை பாக்டீரியாக் கிருமிகள் மூலம் பிளாச்சரி நோய் ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்

சுறுசுறுப்பின்மை, பசியின்மை, வாந்தி மற்றும் பேதி ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

இந்நோயின் காரணமாக உடம்பு நீண்டும், மார்புப் பகுதி வீங்கியும் காணப்படும்.

இறுதிக்கட்டத்தில் தோல் கறுத்து காணப்படுவதோடு துர்நாற்றம் வீசக்கூடிய கறுப்பு திரவம் வெளிப்படும்.

பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் கிருமி மூலம் தாக்குதல் ஏற்படின் தலை கொக்கி வடிவத்தில் வளைந்தும் இறப்பிற்குப் பின்னர் தோல் கறுத்தும் வறண்டும் காணப்படும்.

நோய் மேலாண்மை

புழுக்களின் தோலில் சேதம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

இறந்த புழுக்களையும், படுக்கை கழிவுகளையும் சரியான முறையில் அப்புறப்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவுதலைத் தடுக்கலாம்.

வளர்ப்பு அறையின் அளவிற்கு ஏற்றவாறு முட்டைகளை வைக்கவேண்டும்.

தட்பவெப்பம், ஈரப்பதம் ஆகிய இரண்டிலும் அதிகமாற்றம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

முறையான கிருமி நீக்கம் மிக மிக அவசியம்.

பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பாசிலஸ் துரிஞ்சியன்சிஸ் நோய்க் கிருமிகளைப் பயன்படுத்தும் பொழுது மல்பெரி செடிக்கும் மருந்து உபயோகிக்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளி 90 மீட்டருக்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்வேண்டும்.

மஞ்சள் இலை, மண் படிந்த இலை ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.

800 பி.பி.எம் ஸ்டிரப்டோமைசின் (அ) க்ளோரம் பெனிக்கால் மருந்தினை இலை வழியே கொடுப்பதன் மூலம் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் படுக்கை கிருமி நாசினியான ‚சக்தி செரித்தூள் பட்டுப்புழுவில் பாக்டீரியா கட்டுப்படுத்தவல்லது.

3. பூஞ்சாண நோய்

பெரும்பாலும் மழை மற்றும் குளிர் காலங்களில் நோய் காணப்படுகிறது. இந்நோயினை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளாவன, ப்யூவெரியா, பாசியானா, மெட்டாரைசியம் அனிசோப்ளியே மற்றும் அஸ்பர்ஜில்லம் ஆகும்.

நோயின் அறிகுறிகள்

சுறுசுறுப்பின்மை, பசியின்மை, வாந்தி மற்றும் பேதி ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

தோல் விரிவுத்தன்மையை இழந்து உடைந்திடும் நிலையில் இருக்கும்.

இறுதியில் புழுக்களின் மீது வெள்ளை மற்றும் பச்சை பூஞ்சாணம் படர்ந்து காணப்படும்.

அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சாணம் இளம் புழுக்களைத் தாக்கவல்லது. நோய் வாய்ப்பட்ட புழுக்கள் அழுகி காணப்படும்.

நோய் மேலாண்மை

சுகாதார வளர்ப்பு முறையைக் கடைபிடித்தல்

அறையின் அளவிற்கு மேல் புழுக்களின் வளர்த்தல் மற்றம் பட்டினி போடுதல் கூடாது.

ஈரப்பதத்தை குறைக்கும் பொருட்டு, படுக்கையில் சுண்ணாம்பு 3 கிராம் சதுர அடி என்ற அளவில் பயன்படுத்துதல்வேண்டும்.

புழு வளர்ப்பு அறையின் சுவர் மற்றும் தரையினை சுண்ணாம்பு (அ) ப்ளீச்சிங் பவுடர்  தூள் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

தகுந்த காற்றோட்ட வசதி அவசியம்.

சுரக்க்ஷா என்ற படுக்கை கிருமி நாசினி இந்நோயைப் கட்டப்படுத்தவல்லது.

டோல்நாப்டேட் மருந்தினை 2500 பி.பி.எம் என்ற அளவில் இலை வழியே  கொடுப்பதன் மூலம் நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.

4. பெப்ரைன் நோய்

இந்நோய் முட்டை மூலம் பரவக்கூடியது.

முட்டை தயாரிக்கும் இடங்களில் தகுந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம்.

நோய் இல்லாத முட்டைகளை மட்டுமே விநியோகம் செய்வதால் இந்நோயின் தாக்கம் வளர்ப்பகங்களில் காணப்படுவதில்லை.

மேலாண்மை

நோய் தோற்றற்ற முட்டைகளை உற்பத்தி செய்யவும்

பட்டுபுழு வளர்ப்பு அறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பராமரிக்கவும்

அடைக்காப்பதர்க்கு முன், தரையின் மேற்பரப்பை  2 சதவீதம்  ஃபார்மலினை கொண்டு 10 நிமிடங்களுக்கு சுத்தம் செய்யவும்.

பாதிக்கப்பட்ட முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சிகள், படுக்கை  கழிவுகள், முதலியனவற்றை சேகரித்து அழிக்கவும்.

click me!