சிறப்பான வருமானம் தரும் “சேம்பு”

 |  First Published Oct 8, 2016, 5:57 AM IST



> உருளைக்கிழங்கு இணையான சுவை மற்றும் சத்துக்களைக் கொண்டது, சேம்பு என அழைக்கப்படும் சேப்பக்கிழங்கு. இது தரைப்பகுதியிலே வளரக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் இதைச் சமைக்கலாம். குறிப்பாக திண்டுக்கல், நத்தம், காரைக்குடி போன்ற பகுதிகளில் சைவ விருந்துகளில் பட்டை, சோம்பு போன்ற நறுமணப் பொருட்களைச் சேர்த்து இறைச்சி போலவே இதை சமைத்துப் பரிமாறும் பழக்கமும் உண்டு. அதனால், எப்போதும் நல்ல தேவை உள்ள காய்கறிகளில் சேப்பக்கிழங்கும்  ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. தன்னை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளை, வருமானத்தால் செழிக்க வைக்கும் பயிர்கள் வரிசையிலும் இது இடம் பிடித்திருக்கிறது!
>
> இதை, ‘உண்மை’ என ஆமோதிக்கும், திருவண்ணமாலை மாவட்டம், கலசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், தொடர்ந்து சேப்பங்கிழங்கு சாகுபடி செய்பவர்களில் ஒருவர். ஒரு மதியவேளையில் மேற்பார்வை செய்தபடியே உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், கோவிந்தராஜ்.
>
> குத்தகை நிலத்தில் குதூகல சாகுபடி!
>
> “பி.இ. சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, நாலு வருஷம் ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன். அது சரியா வராததால வேலையை விட்டுடு, சொந்தமா ஒப்பந்த முறையில வீடு கட்டிக்கொடுக்குற வேலையை மூணு வருஷம் பார்த்தேன். அதுவும் திருப்தியா இல்லை. அதையும் விட்டுட்டு நண்பர்களோட சேர்ந்து ஒப்பந்த முறையில் காய்கறி உற்பத்தியை ஆரம்பிச்சேன். விவசாயிகள் கிட்ட விதை கொடுத்துடுவோம். அவங்க சாகுபடி செய்றதுக்காக ஒரு தொகையைக் கொடுத்துட்டு, காய்கறிகளை வாங்கி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பிடுவோம். அது இப்போவரைக்கும் நல்லா போய்க்கிட்டு இருக்கு.
>
> எங்க தாத்தா காலத்துலயே பரம்பரை நிலங்களை வித்துட்டாங்க. எங்க அப்பா, சொந்தக்காரங்களோட நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செஞ்சுதான் எங்களைப் படிக்க வைச்சார். அதனால எனக்கும் விவசாயம் மேல கொஞ்சம் ஆர்வம் உண்டு. நான், பத்து வருஷமா 16 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செஞ்சுக்கிட்டே இருக்கேன்” என்று முன்கதை சொன்ன கோவிந்தராஜ், தொடர்ந்தார்.
>
> அதிக விலை கிடைக்கும் சேம்பு!
>
> “ஆரம்பத்துல நிலத்துக்கான குத்தகைத் தொகை குறைவா இருந்துச்சு. இப்போ 16 ஏக்கர் நிலத்துக்கும் சேர்த்து வருஷத்துக்கு ஒண்ணரை லட்ச ரூபாய் குத்தகைத் தொகையா கொடுக்கிறேன். ஆரம்பத்துல மல்லாட்டை (நிலக்கடலை), நெல், பருத்தி, கரும்புனு சாகுபடி செய்தேன். குறைவான அளவுல காய்கறிகளையும் சாகுபடி செய்தேன். கோயம்பேடு மார்க்கெட்டுல விலை அதிகம் கிடைக்கிற காய்க்கறிகளைத்தான் நாங்க விவசாயிகள் கிட்ட சாகுபடி செய்யச் சொல்வோம். அந்த வகையில சேம்புக்கு நல்ல விலை கிடைக்குறதைப் புரிஞ்சுக்கிட்டேன். அதில்லாம எங்கள் ஊர்ல இருந்து இரண்டு கிலோ மீட்டர்ல இருக்குற ‘சாலையனூர்’ கிராமம் சேம்பு சாகுபடிக்கு ஃபேமஸ்.
>
> “எல்லாருமே சேம்பு சாப்பிடலாம். கிராமத்தை விட நகரப் பகுதிகள்ல விற்பனை வாய்ப்பு அதிகமாவே இருக்கு. குறிப்பா, சென்னையில நிறைய தேவை இருக்குறதால, விற்பனையில பிரச்னையே இல்லை”
>
> அதனால நானும் நாலரை ஏக்கர்ல சேம்பு சாகுபடியை ஆரம்பிச்சேன். அதுல நல்ல மகசூல் கிடைச்சுட்டிருக்கு.
>
> ஒரு சென்ட் நிலத்துல ஒரு மூட்டை (80 கிலோ) கிழங்கு கிடைக்கும். பெருசா நஷ்டமோ, பூச்சித்தாக்குதலோ, நோய்த் தாக்குதலோ இருக்காது. எல்லாருமே சேம்பு சப்பிடலாம். கிராமத்தை விட நகரப் பகுதிகளில் விற்பனை வாய்ப்பு அதிகமாகவே இருக்கு. குறிப்பா, சென்னையில நிறைய தேவை இருக்குறதால, விற்பனையில பிரச்சனையே இல்லை.
>
> ‘சேப்பங்கிழங்கின் சாகுபடிக் காலம் 6 மாதங்கள். களிமண் வகை தவிர மற்ற எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. நடவு செய்வதற்கு வைகாசிப் பட்டம், தைப் பட்டம் ஏற்றவை. தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 10 டிப்பர் என்ற கணக்கில் எருவைக் கொட்டிக் களைத்து, இரண்டு சால் ரோட்டோவேட்டரால் உழவு செய்து 10 நாட்கள் ஆறப்போட வேண்டும். பிறகு, நிலத்தில் முளைத்து வரும் களைகளை… இரண்டு சால் ரோட்டாவேட்டர் உழவு செய்து புரட்டிவிட்டு நிலத்தைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். மாட்டு ஏர் ஓட்டி, 2 அடி அளவில் பார் ஓட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, தண்ணீர் கட்டி பாரின் ஒரு பகுதியில் முக்கால் அடி இடைவெளியில் ஒரு விதைக்கிழங்கு வீதம் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவுசெய்யும்போது ஏக்கருக்கு 500 கிலோ அளவில் விதைக்கிழங்குகள் தேவைப்படும் (அறுவடை செய்த கிழங்குகளை இரண்டு மாதங்களில் நிழலில் கொட்டி வைத்தால், முளைப்பு எடுக்கும். இவற்றைத்தான் விதைக்கிழங்குகளாகப் பயன்படுத்த வேண்டும்). 200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சூடோமோனஸ் கலந்து முளைப்பு எடுத்த 500 கிலோ விதைக்கிழங்குகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து விதைநேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
>
> நடவு செய்த 7-ம் நாளில் வேர்பிடித்து வளரத்தொடங்கும். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால் 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 25-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 50-ம் நாளில் செடிகளை மையமாக வைத்து, கரையைப் பிரித்துக் கட்டி… 300 கிலோ எருவுடன் கலப்பு உரத்தைக் கலந்து செடிகளுக்கு நிரந்து வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை 5 கிலோ சூடோமோனஸ் கலவையைத் துணியில் கட்டி பாசன தண்ணீர் செல்லும் வாய்க்காலில் வைக்க வேண்டும். 70-ம் நாளில் டேங்குக்கு(10 லிட்டர்) 100 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 10 டேங்குகள் தேவைப்படும். இதைப் பூச்சி, நோய்கள் பெரிதாகத் தாக்குவதில்லை. 25-ம் நாளில் இருந்து வேர்கள் போல உருவாகி, 65-ம் நாளில் கிழங்குகள் பிரிய ஆரம்பித்து, 180-ம் நாளில் வெட்டுக்குத் தயாராகிவிடும்.”
>
> சாகுபடிப் பாடம் முடித்த கோவிந்தராஜ், “ஒவ்வொரு செடியிலும் அரை கிலோ முதல் முக்கால் கிலோ அளவுக்கு கிழங்குகள் இருக்கும். கிழங்குகளை அறுவடை செஞ்சு தரம் பிரிச்சு மூட்டை பிடிச்சு மார்கெட்டுக்கு அனுப்பிடுவேன். ஒரு ஏக்கர்ல 8 டன்ல இருந்து 12 டன் வரைக்கும் கிழங்கு கிடைக்கும். சராசரியா 10 டன் கிழங்கு கிடைச்சுடும். ஒரு கிலோ கிழங்கு 18 ரூபாய்ல இருந்து 25 ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். சராசரியா கிலோவுக்கு 20 ரூபாய்னு வெச்சுகிட்டா… 10 டன் கிழங்குக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல செலவெல்லாம் போக, ஒண்ணேகால் லட்ச ரூபாய் வரை லாபம் கையில நிக்கும்” என்று கணக்கு வழக்குகளைச் சந்தோஷமாகச் சொன்னார்.

click me!