நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாக இருக்கிறது.நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறது? நாட்டுக் கோழிகளை யாரும் “பிராய்லர்” கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை.
கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற முடிகிறது.
அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பிய பலூன் போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறது. இந்த கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.
ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.