மிளகாய்க்கு சிகப்பு தங்கம் என்ற மற்றொரு பெயர் உண்டு. மிளகாயை பயன்படுத்தாத மக்கள் மற்றும் நாடுகள் கிடையாது.
அணைத்து வகையான மசாலா பொருட்களிலும் மிளகாய் முதன்மை பொருளாக பயன்படுத்தபடுகிறது.
நம் அனைவரது வீட்டிலும் மிளகாய், மிளகாய் பொடி, மசாலா பொடி போன்ற பல்வேறு வடிவங்களில் மிளகாயை பயன்படுத்துகிறோம்.
மேட்டுபாத்திகளில் நாற்றங்கால் விடவேண்டும். அதாவது 3×9 நீள அகலங்களில் பாத்தி மற்றும் கரை அரை அடி உயரம் இருக்குமாறு பாத்தி அமைக்க வேண்டும்.
தொழுஉரம் வயலில் இட்டு நன்கு உழுது 2.5 அடி அகல பார்கள் அமைத்து 2.5 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவேண்டும்.
வயலில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, பின்பு உயிர் உரங்கள் இட்டு 35 நாட்களான நாற்றுகளை ஒரு குத்துக்கு மூன்று நாற்றுகள் என்ற விகிதத்தில் நடவு செய்ய வேண்டும். நாற்றங்காலில் பூ பிஞ்சுகள் தோன்றிய பின்பு நாற்றுகளை பிடுங்கி நடவு செய்வதால், திடமான செடிகள் மற்றும் மகசூலை எடுக்கலாம்.
நாற்று நட்ட பத்தாவது நாள் முதல் களை எடுக்கவேண்டும். பிறகு இயற்கை கரைசல்கள் தொடர்ந்து அளிப்பதன் மூலம் செடிகள் உயரமாக வளரும். செடிகளின் ஆயுட்காலமும் அதிகரிக்கும்.
மிளகாய் செடியை அதிகம் தாக்கும் நோய்கள் இலை முடக்கு, அசுவினி மற்றும் காய்துளைப்பான். ஆரம்பம் முதல் கற்பூரகரைசல் தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சிகள் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.
மண்புழு உரம் மற்றும் VAM, மீன் அமிலம் கலந்து இருபது நாட்களுக்கு ஒருமுறை வேரில் கொடுத்து பின் மீன் அமிலம் செடிகள் மீது தெளித்தால் திரட்சியான காய்கள் பெறலாம். செடிகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
மிளகாய் பயிரில் கற்பூரகரைசல் தெளித்தால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும். மிளகாய் செடியில் பூக்கள் உதிர்வு அதிகமாக இருக்கும். பூக்கள் உதிர்வை தடுக்க, தேங்காய் பால் கடலை புண்ணாக்கு மோர் கரைசல் தொடர்ந்து தெளித்தால் பூக்கள் உதிர்வை முற்றிலும் தடுக்கலாம்.
மிளகாய் அறுவடைக்கு தயாரான பின்னர், பச்சை மிளகாய் வாரம் ஒரு முறை பறிக்கலாம். காய்ந்த வற்றல் மிளகாய் வேண்டும் என்றால், மிளகாய் நன்கு பழுத்த பின் அறுவடை செய்து சிமெண்ட் தரையில் காயவைத்து சேமித்து வைக்கலாம்.
கண்டிப்பாக மிளகாய் பயிருக்கு தண்ணீர் தேங்க கூடாது. இதனால் வேர் அழுகல் வருவதற்கு வாய்ப்புண்டு. மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்சவேண்டும்.
மிளகாய் ஒரு பணப்பயிர். ஒரு விவசாயின் பொருளாதார நிலையை திடீரென உயர்த்தும் பயிர்களில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.