1.. மரவள்ளி, குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் பயிர்
2. இதன் ஆயுட் காலம் 7 முதல் 10 மாதம் வரை. சில ரகங்கள் 7 மாதத்தில் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராகிறது.
3. மரவள்ளியில் பல தரப்பட்ட வகைகள் உள்ளன. கோயம்புத்தூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வகைகள் மற்றும் தாய்லாந்து வகைகள் பிரபலமானவை.
4. மூன்று முதல் மூன்றரை அடி இடைவெளியில் மரவள்ளி சாகுபடி செய்யவேண்டும்.
5. இயற்கை முறை சாகுபடி என்றால் அடி உரமாக 15 டன் தொழு உரம் இட்டு ஆழமாக உழவு செய்து பின் நடவு செய்ய வேண்டும்.
6. மரவள்ளி குச்சிகளை, பிளாஸ்டிக் குழி tray க்களில் மண், தொழு உரம், சிறிது வேப்பம் பிண்ணாக்கு கலந்து நட்டு நிழல் அடியில் வைத்துவிட்டால் அணைத்து குச்சிகளும் துளிர் விட்டு விடும். சூழ்நிலைக்கேற்ப தண்ணீர் தெளிக்கலாம். நன்கு வேர் பிடித்த உடன் வயலில் நடவேண்டும்.
7. வயலில் நட்டு தண்ணீர் பாய்ச்சிய மறுநாள் ஒரு ஏக்கருக்கு, சூடோமேனஸ் ப்ளாரசன்ஸ் 3 லிட்டர், அசோஸ்பைரில்லம் 2 லிட்டர், பாஸ்போபாக்டீரியா 3 லிட்டர், போட்டாஸ் பேக்டீரியா 2 லிட்டர், வி.ஏ.எம் 10 கிகி ஆகியவற்றை ஒரு ஏக்கருக்கு வெல்லம் 2 கிகி கலந்து 100 கிலோ தொழு உரத்தில் கலந்து ஒரு வாரம் நிழலில் வைத்திருந்து வயலில் தெளிக்க வேண்டும். இதை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று முறை இட வேண்டும்.
8. தேவைப்பட்டால் மீன் அமினோ அமிலம் தெளிக்கலாம். இதனால் நன்கு திரட்சியான கிழங்குகளை பெறலாம்.
9. மரவள்ளியை அதிகம் தாக்கும் நோய்கள் மாவு பூச்சி தாக்குதல் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். இவை இரண்டும் மரவள்ளியை அதிகம் தாக்கும் பூச்சி வகைகள் ஆகும்.
10. 100 மிலி வேப்பெண்ணெய், 100 மிலி புங்கம் எண்ணெய், 2 லிட்டர் பசு மாட்டு கோமியம், 10 வில்லை கற்பூரம் சிறிது ஆல்கஹாலில் கலந்து தெளிப்பதால் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். முதலில் வேப்பெண்ணெய் + புங்க எண்ணெய் இரண்டையும் ஷாம்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்..பின்பு மற்றவைகளை கலந்து பயிருக்கு தெளிக்கலாம். பூச்சிகள் முழுவதும் இறந்துவிடும்.
11. ஊடு பயிராக வெங்காயம் மற்றும் முள்ளங்கி மற்றும் செடி அவரை ஆகியவற்றை பயிரிடலாம்.
12. இரண்டு பாருக்கு இடையில் முதலில் குச்சிகளின் ஓரததில் பார் பிடித்து முள்ளங்கி யை நடவேண்டும் பின்பு நடுவில் வெங்காயம் நாற்று நட்டு விடலாம்.
13. நட்ட 40 வது நாள் முள்ளங்கியும் 90 நாள் முதல் வெங்காயமும் அறுவடை செய்யலாம். இதன் மூலம் கணிசமான ஒரு வருமானம் பெற்று விடலாம்.
14. வாரம் ஒரு முறை ஜீவாமிர்த கரைசல், பழ கரைசல் ஆகியவற்றை தொழு உரத்துடன் கலந்து இடுவதால் மிக திரட்சியான மற்றும் எடை அதிகமான கிழங்குகளை பெறலாம்.