முயல் வளர்ப்பு
குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது. முயல்களைத் தோலுக்காகவும், இறைச்சி மற்றும் உரோமத்திற்காகவும் வளர்க்கலாம். சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு.
நிலமற்ற விவசாயிகள், வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்.
இனங்கள்
** சின்செல்லா
இந்த இனம் சோவியத் குடியரசு நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் எடை 4.5-5 கிலோகிராம் வரை இருக்கும். இது அதிகம் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டாலும் இதன் ரோமங்கள் கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.
** சாம்பல் நிற ஜெயிண்ட்
இதுவும் சோவியத் குடியரசு நாடுகளைச் சேர்ந்த இனம், எடை 4.5-5 கிலோ வரை இதன் ரோமம் அடர்த்தியாகக் குழியுடன் காணப்படுவதால் இது ‘குழிமுயல்’ எனத் தவறாகக் கருதப்படுகிறது. இது உரோமம் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.
** நியூசிலாந்து வெள்ளை
இவ்வினம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. உரோமங்கள் வெள்ளை நிறம், தோல் நிறமற்றது. மெலனின் நிறமி இல்லாததால் கண்ணின் நிறம் சிவப்பாக இருக்கும். 4-5 கிலோ எடையுடன் இது இறைச்சி மற்றும் உரோமத்திற்காக வளர்க்கப்படுகிறது.
** வெள்ளை நிற ஜெயிண்ட்
இதுவும் சோவியத் குடியரசின் இனம் ஆகும். இது தோற்றத்தில் நியூசிலாந்து வெள்ளை போன்றே இருக்கும். உரோமம் வெள்ளை நிறத்துடனும், தோலும் கண்களும் சிவப்பு நிறத்துடனும் காணப்படும். ஆனால் உடல் சற்று நீளமாகக் காணப்படும்.
** அங்கோரா
மூன்று கிலோ மட்டுமே எடைகொண்ட பழங்காலத்திலிருந்து வளர்க்கப்படும் சிறிய இனம் ஆகும். கம்பளி தயாரிக்க உதவும் வெள்ளை நிற உரோமங்களுடன் கூடியது. ஒரு வருடத்திற்கு 3-4 முறை உரோமம் கத்தரிக்கலாம். 300-1000 கிராம் அளவு உரோமம் கிடைக்கும்.
** கலப்பு இனங்கள்
மேலே கூறப்பட்ட அயல்நாட்டு இனங்களுடன் உள்ளூர் இனங்கள் கலப்பு செய்யப்பட்டு புதிய இனங்கள் உருவாகின்றன. கேரள தட்பவெப்பநிலைக்கு இவ்வினம் மிகவும் ஏற்றது. எடை 4-4.5 கிலோ இருக்கும். உரோமங்களின் நிறம் ஒவ்வொரு முயலுக்கும் வேறுபடும்.