ஜப்பானிய காடை வளர்ப்பு முறை
மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம்.
ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.
ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.
முதல் முறையாக காடையை வளர்ப்பவர்கள், சுமார் 12 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். முதல் பத்து நாட்களுக்கு விளக்குப் போட்டு, போதுமான சூட்டை (வெப்பம்) குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களும் பருவ நிலைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.
முதல் இரண்டு வாரத்தில் பெரும் பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் விழுந்து அதிகமாக இறந்து விடும். அந்தப் பாத்திரத்தில் கோலிக்குண்டுகளை போட்டு வைத்தால் உள்ளே என்னவோ இருக்கிறது என்ற பயத்தில் குஞ்சுகள் உள்ளே இறங்காமல் இருக்கும்.
இதன் மூலம் அவற்றின் இறப்பைத் தவிர்க்கலாம். அல்லது ‘நிப்பிள்’ மூலம் தண்ணீர் கொடுக்கலாம். நிப்பிளைப் பயன்படுத்தும் போது சுத்தமான நீர் தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு கிடைக்கும்.
காடைக் குஞ்சுகளின் கால் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வளவளப்பான பரப்பில் (செய்தித் தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் தீவனம், தண்ணீர் எடுக்காமல் இறந்து போகும். எனவே, சணல் துணியைப் பரப்பி அதன் மேல் மூன்று நாள் வளர்ந்த பிறகு, வளவளப்பான பரப்பில் வளர்த்தால் கால் ஊனமாகாது.
இரண்டாவது வாரத்தில் காடையின் எடை, சராசரியாக 90 கிராம் இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும் அதனால் தொடர்ச்சியாக தீவனம் கிடைப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் தீவனம் எடுக்க வசதியாக இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.