இலாபம் தரும் மிளகாய் வற்றல்…

 |  First Published Oct 19, 2016, 2:59 AM IST



 

அறுவடைக் காலத்தில் மிளகாய் வற்றல் விலை கிலோவிற்கு ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்களது விதைப்பு முடிவை எடுக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

உலகளவில் இந்தியா "மசாலா கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. 2012-13ஆம் ஆண்டில் மிளகாய் 7.93 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. உலக அளவில் மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா (36 சதவீதம்) முதன்மை நாடாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து சீனா (11 சதவீதம்), வங்கதேசம் (8 சதவீதம்), பெரு (8 சதவீதம்) மற்றும் பாகிஸ்தான் (6 சதவீதம்) ஆகிய நாடுகள் மிளகாய் வற்றல் உற்பத்தியில் பங்களிக்கிறது.
இந்தியாவின் மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் ஆந்திரம் முதலிடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து கர்நாடகம், ஒடிசா, மகாராஷ்டிரம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 85-90 சதவீதம் உள்நாட்டு உபயோகத்திற்கும் மீதமுள்ள 10-15 சதவீதம் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து மிளகாய்த் தூள், காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய் மற்றும் மிளகாய் பசை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவிலிருந்து வற்றல் மிளகாய் இலங்கை, அமெரிக்கா, நேபாளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2011-12 இல் தமிழகத்தில் மிளகாய் வற்றலானது 56,442 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 24,640 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் ராமநாதபுரம் (முண்டு), விருதுநகர் (சம்பா), தூத்துக்குடி (முண்டு), சிவகங்கை (சம்பா) மற்றும் திருநெல்வேலி (சம்பா, முண்டு) ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பொதுவாக, தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை துவங்கிய பிறகே (அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் இறுதி வரை) மிளகாய் விதைக்கப்படுகிறது.

இந்தியாவில் மிளகாய் வரத்தானது நவம்பரில் தொடங்கி மே இறுதி வரை நீடிக்கும். இதில் முதல்வரத்து மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் நவம்பரில் தொடங்கும். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வரத்து நீடிக்கும்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய் விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், கமுதி மற்றும் முதுகுளத்தூர் சந்தைக்கு பிப்ரவரி முதல் மே வரை அறுவடைக்கு வரும்.
அனைத்து மாநிலங்களின் உற்பத்தி, குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் உற்பத்தி, தேவை மற்றும் ஏற்றுமதியை பொருத்தே மிளகாய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வற்றல் குவிண்டாலுக்கு ரூ.6,500 - 8000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மிளகாய் பயிரிடும் விவசாயிகள், நடப்பு பருவத்தில் மிளகாய் பயிரிடலாமா அல்லது வேறு பயிர்கள் பயிரிடலாமா என்ற முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனை தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகம், 18 ஆண்டுகளாக விருதுநகர் சந்தையில் நிலவிய விலையை ஆய்வு செய்தது.

அதன் அடிப்படையில், 2016 பிப்ரவரி, மே மாதங்களில் அறுவடை செய்து சந்தைக்குப் புதிதாக வரும் மிளகாய் வற்றல் கிலோவிற்கு ரூ.75-80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மிளகாய் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம்.

click me!