கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக தென்னையில் ஊடுபயிராக கோகோ பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தோட்டக்கலைத் துறையிலிருந்து விவசாயிகளுக்குத் தேவையான கோகோ செடிகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான உரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
undefined
வாரம் ஒருமுறை தென்னைக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது, அந்த தண்ணீரே இதற்கும் போதுமானதாக இருப்பதால், கோகோவிற்கு தனியாக தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை.
செடி நட்ட மூன்றாம் ஆண்டு ஆரம்பத்தில், காய் காய்க்க ஆரம்பிக்கும். முதல் ஆண்டில் ஒரு மரத்திற்கு அரை கிலோ விதை கிடைக்கும்.
நான்காம் ஆண்டில் இருந்து ஒரு மரத்திலிருந்து 2 கிலோ விதை எடுக்கலாம். ஒரு மரம் 35 முதல் 40 வருடம் வரை பலன் கொடுக்கும். ஒரு ஏக்கரில் 200 மரக் கன்றுகள் நடலாம்.
3 ஏக்கரில் தென்னையில் ஊடுபயிராக கோகோ பயிரிட்டு காய் பெருத்து மஞ்சள் நிறமாக மாறிய உடன் அவற்றை சேகரித்து சாக்லேட் நிறுவனத்திலிருந்து கிலோ ரூ.130க்கு கோகோ விதைகளை நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.
இதனால், வியாபாரிகளைத் தேடி அலைய வேண்டிய நிலை இல்லை. அதிக உழைப்பில்லாமல் உபரியாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்ட முடிவதால், பெரும்பாலான தென்னை விவசாயிகள் கோகோவை ஊடுபயிராக பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர்.
கோகோ விதைகளை காயவைத்து உருவாக்கப்படும் பவுடர், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், ஆரோக்கிய பானங்கள் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது. மதுரையில் அலங்கா நல்லூர், கொட்டாம்பட்டி பகுதிகளில், கோகோ பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்னை, பாக்கு, எண்ணெய்ப்பனை ஆகியவற்றில் ஊடுபயிராக கோகோவைப் பயிரிடலாம்.