எஸ்.வி.பி.ஆர்.4:
தமிழகத்தில் கோடையில் குறைந்த பரப்பளவான 40,000 எக்டரில் மட்டுமே பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் நெல்தரிசு பகுதிகளில் கோடையில் பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது பல ஒட்டு ரகங்கள் மற்றும் பி.டி. ஒட்டு ரகங்கள் வெளியிடப்பட்டு இருந்தாலும் கோடைப்பட்டத்திற்கு ஏற்ற உயர் விளைச்சல் தரக்கூடிய ஒட்டு ரகங்கள் இல்லை.
தற்போது கோடை இறவை பட்டத்தில் எஸ்.வி.பி.ஆர்.2 ரகமும், நெல் தரிசு பருத்தியில் குறுகிய கால எம்.சி.யு.7 மற்றும் எஸ்.வி.பி.ஆர்.3 ரகங்கள் மட்டுமே நடப்பு சாகுபடியில் உள்ளன.
கோடை இறவைப்பட்டத்தில் பி.டி. ஒட்டு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் சராசரி மகசூலைவிட குறைவாகவே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் கோடையில் தத்துப்பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதாலும் பூக்கும் சமயம் அதிக இரவு நேர வெப்பம் (>27 டிகிரி செல்சியஸ்) இருப்பதாலும் இவற்றைத் தாங்கி வளரக்கூடிய தன்மை தற்போதைய பி.டி.ரகங்களில் இல்லை.
நடப்பு சாகுபடியில் உள்ள எம்.சி.யு.7, எஸ்.வி.பி.ஆர்.2 மற்றும் எஸ்.வி.பி.ஆர்.3 ரகங்கள் நல்ல மகசூலைக் கொடுத்தாலும் இந்த ரகங்களின் பஞ்சு தற்போதைய பெரும்பாலான மில் தேவையான 40ம் நம்பர் நூல் நூற்க ஏற்றதாக இல்லை.
எனவே 40ம் நம்பர் நூல் நூற்கவல்ல கோடை இறவைப் பட்டத்திற்கேற்ற ரகங்களை உருவாக்கும் பட்சத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையம் எஸ்.வி.பி.ஆர்.4 என்ற உயர்தர நடுத்தர இழை நீளம் (27.8 மி.மீ) கொண்ட உயர் விளைச்சல் பருத்தி ரகத்தை 2009ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
இந்த ரகம் நடப்பு சாகுபடியில் உள்ள எஸ்.வி.பி.ஆர்.2, எஸ்.வி.பி.ஆர்.3 மற்றும் எம்.சி.யு.7 ரகங்களைவிட அதிக விளைச்சல் தருவதுடன் பூச்சி மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையைக் கொண்டுள்ளதால் சராசரியாக எக்டருக்கு 20 குவிண்டால் பருத்தி விளைச்சல் கொடுக்கிறது. எனவே கோடை இறவை மற்றும் நெல் தரிசு பருத்தி விவசாயிகள் எஸ்.வி.பி.ஆர்.4 ரகத்தை பயிரிடுவதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.
சிறப்பம்சங்கள்:
எஸ்.வி.பி.ஆர்.4 பருத்தி நீண்ட இழை நீளம் கொண்ட உயர்விளைச்சல் ரகமான எம்.சி.யு.5 ரகத்துடன் பூச்சி மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய 4727 ரகத்தை கரு ஒட்டுச்சேர்த்து உருவாக்கப்பட்டது. நடுத்தர வயதுடைய இந்த பருத்தி ரகம் 150 நாட்களில் விளையக்கூடியது.
எஸ்.வி.பி.ஆர்.4 எக்டருக்கு சராசரியாக 1583 கிலோ பருத்தியும் அதிகபட்சமாக 3772 கிலோ பருத்தியும் கொடுத்துள்ளது. மறுதழைவிற்கு ஏற்றதாக இருப்பதால் முதல் அறுவடை 150 நாட்களில் முடிந்தவுடனும் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் குறுவை நீர்வரத்து இல்லாதபோதும் ஒருபோக சம்பா பாசன பகுதிகளிலும் மறுதழைவிற்கு விட்டு இரண்டாம் அறுவடையில் எக்டருக்கு 1000 கிலோ பருத்தி மகசூல் கிடைக்கிறது. இதனால் குறைந்த செலவில் அதிக வருமானம் கிடைக்கிறது.
எஸ்.வி.பி.ஆர்.4 ரகம் 36.2 சதம் அறவைத்திறன் கொண்டது. பருத்தி இழையின் மற்ற குணங்களான நிறம், இழை, வலிமை ஆகியன எம்.சி.யு.5 ரகத்தை ஒப்பிடும் வகையில் உள்ளதால் நல்ல விலை கிடைக்கிறது. எஸ்.வி.பி.ஆர்.4 ரகம், எஸ்.வி.பி.ஆர்.2 ரகத்தைப் போல் ஓங்கி வளர்ந்து ஒன்று அல்லது இரண்டு செடி கிளைகளும் 16-20 காய் கிளைகளும், கிளைக்கு 5-7 காய்களும் கொண்டது.
நன்கு வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டுள்ளதால் கோடைகாலத்தில் நிலவும் அதிக வெப்பத்தைத் தாங்கி வளர்வதுடன் சப்பைகள், காய்கள் அதிகம் உதிராமல் நிறைய காய்கள் பிடிக்கின்றன. தத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்பு சக்தி கொண்டது. கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தேசிய செயல் விளக்கத் திடல்கள் மானாவாரியில் சராசரியாக எக்டருக்கு 1600-1800 கிலோவும் கோடை இறவை மற்றும் நெல் தரிசு பருத்தி பகுதிகளில் எக்டருக்கு 2200-2400 கிலோ பருத்தி மகசூலும் தந்துள்ளது. இதனால் கோடை இறவைப்பருத்தி சாகுபடி செய்யும் பகுதிகளில் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சாகுபடி பருவம்:
பிப்ரவரி முதல் ஜூலை வரை (கோடை இறவை); விதையளவு-10 கிலோ எக்டருக்கு. நடவு இடைவெளி 75×30 செ.மீ. நீர்ப்பாசனம் - விதைத்தவுடன் ஒரு முறையும் பின்னர் வெப்பநிலைக்கேற்ப 10-15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.