சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி
விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை சாகுபடி செய்யலாம்.
ஒரு விதை, 20 ரூபாய்க்கு வாங்கும் விவசாயிகள், ஒரு ஏக்கரி,ல் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கலாம்.
ஆறு மாதத்திற்கு பிறகு அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஜூஸ் பாக்டரி மற்றும் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பலாம்.
பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது. மேலும், மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனை இருக்காது.
நெல், கரும்பு, வாழை, மஞ்சள் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவாதல், குறைந்த அளவே தண்ணீர் வருமானம் கொடுக்கும் பப்பாளி சாகுபடிக்கு விவசாயிகள் தைரியமாக மாறலாம். இதனால் பப்பாளி சாகுபடி செய்யப்படும் பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகும்.
ஒரு கிலோ ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை மொத்த விற்பனையாளர்கள் தோட்டத்திலே வந்து காய்களை எடுத்து செல்கின்றனர். இதன்மூலம் வாரத்துக்கு ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும்.
மற்ற பயிர்களை காட்டிலும் பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
பயிரிடும் முறை:
மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும்.
மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும்.
ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம்.
பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள்.
நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது.
வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன. இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம்.
பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம். 60 நாள்களில் நாற்று தயாராகிவிடும்.
பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. ல 45 செ.மீ. ல 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.
வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது. ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும். செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும்.
கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.