நெற்பயிரை பரவலாக ஆனைக்கொம்பன் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் தகுந்த மேலாண் முறையைப் பின்பற்ற வேண்டும்.
தற்போதுள்ள பருவத்தில் நெற்பயிரை ஆனைக்கொம்பன் தாக்கி சேதப்படுத்தி வருகிறது. இப்புழுக்கள் தண்டைத் துளைத்து உள்சென்று குருத்தைத் தாக்கும்போது உள்பகுதியிலிருந்து தோன்றும் இலை, மேற்கொண்டு வளராமல் வெங்காய இலை போல குழலாக மாறிவிடும்.
இது வெள்ளிக் குருத்து அல்லது வெங்காய இலைச் சேதம் எனப்படும். இத்தூர்கள் பார்ப்பதற்கு யானைத் தந்தம் போன்று இருப்பதால் ஆனைக்கொம்பன் என்று பெயர். தாக்கப்பட்ட தூர்களிலிருந்து கதிர்கள் வெளிவராது.
இதிலிருந்து நெற்பயிரை காக்கும் மேலாண்மை முறை: அறுவடைக்குப் பின் எஞ்சி நிற்கும் தாள்கள், களைகளை அழித்துவிட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரம் இட வேண்டும்.
தொடர்ந்து ஆனைக் கொம்பன் ஈயின் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகளில் மதுரை 3 நெல் ரகத்தைப் பயிரிடலாம்.
பிளேட்டிகேஸ்டர் ஒரைசே எனும் புழு ஒட்டுண்ணி இயற்கையிலேயே இப்பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஒட்டுண்ணி கொண்ட தூர்களைச் சேகரித்து பத்து சதுர மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வயலில் பரவலாக நடவு செய்யலாம்.
பொருளாதாரச் சேத நிலையை எட்டியவுடன் கீழ்கண்ட பூச்சிக்கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்குத் தெளிக்க வேண்டும்.
கார்போசல்பான் 25 சதவீதம் 800-1000 மி.லி.
குளோரோபைரிபாஸ் 20 சதவீதம் 1,250 மி.லி.
பைப்ரினில் 5 சதவீதம் 1,000-1,500 மி.லி.
பைப்ரினில் 0.3 சதவீதம் 16-25 மி.லி.
தையமித்தக்சாம் 25 சதவீதம் 100 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.