ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல் பெறலாம்
உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை பெற்றுத்தருவதால் பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பெல்லாரி வெங்காயம் ஒரு முக்கியமான காய்கறி பயிராக உள்ளது.
undefined
நமது நாட்டில் வெங்காயம் பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் பல்வேறு பருவங்களில் பயிரிடப்படுகிறது.
நமது நாட்டில் தற்போதைய உற்பத்தி ஹெக்டேருக்கு 10 முதல் 12 டன்கள் மட்டுமே. வெங்காயத்தில் அதிக உற்பத்திக்கு நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் சிறந்த மேலாண்மை முறைகளுடன் அதிக மகசூல் தரவல்ல ரகங்களை தக்க பருவங்களில் சாகுபடி செய்வதே தீர்வாக உள்ளது.
பருவம்:
தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் மே, ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும் மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் (ரபி பருவம்) மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் குளிர் கால வெங்காய பயிர்களில்தான் சிறந்த மகசூல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரகங்கள்:
தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் பல்வேறு ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள் வெளியிட்டிருப்பினும் அடர் சிகப்பு ரகங்களில் என் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு ரகங்களில் பூசா சிகப்பு, என்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகியவை முக்கிய ரகங்களாக சாகுபடியில் உள்ளன.
பயிரிடும் முற :
பொதுவாக பெல்லாரி வெங்காயம் 125 முதல் 140 நாள்கள் வயதுடையதாகும்.
இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள சமமான, வளம் நிறைந்த மண் தேவைப்படுகிறது.
மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 7.6 வரை இருக்க வேண்டும்.
தண்ணீர் தேங்கும் களிமண் நிலங்களை வெங்காய சாகுபடிக்கு தவிர்ப்பது நல்லது.
விதை ஹெக்டேருக்கு 5 முதல் 6 கிலோ.
நாற்றங்கால் ஒரு ஹெக்டேருக்கு தேவைப்படும் நாற்றுகளை உற்பத்தி செய்ய 7.5 மீ. நீளம், 1 மீ. அகலம், 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப்பாத்தி தேவைப்படும்.
உரங்கள் முறையாக பயன்படுத்தினால் 6 முதல் 8 வாரங்களில் நடவுக்கு தயாராகிவிடும்.
நடவுக்குப் பின் 4 முதல் 6 நாள்களுக்கு ஒரு முறை மண்ணின் ஈரத்திற்கு ஏற்றவாறு நீர் பாய்ச்ச வேண்டும்.
வெங்காய பயிரினை இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் மற்றும் பியூசேரியம் தண்டு அழுகல் மற்றும் வெங்காய அழுகல் போன்ற நோய்கள் பெருமளவில் தாக்கி சேதம் ஏற்படுத்துகிறது.இவற்றிற்கு தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் ஆலோசனையின்படி மருந்து தெளித்து பாதுகாக்கலாம்.
விவசாயிகள் நாற்றுவிட்டது மற்றும் நடவு செய்த காலம் முதல் வெங்காய பயிரினை கவனமாக கவனித்து வரவேண்டும். அதில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தோட்டக் கலை அலுவலர்களை அனுகி விவரம் பெற்று பயன்பெறலாம்.
விவசாயிகள் ஹெக்டருக்கு ரூ.8000 மதிப்பில் 19:19:19 நீரில் கரையும் உரங்கள், இமிடாகுளோபிரீட், கார்பன்டாசிம் மற்றும் மான்கோசெப், சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் நுண்ணுரங்கள் போன்ற இடு பொருள்களை 50 சதவீத மானிய விலையில் உயர் தொழில் நுட்பத்தில் வெங்காய சாகுபடி திட்டத்தின் கீழ் பெற்று பயன்பெறலாம்