தேங்காய் எண்ணெய் தொழிலுக்கு தேவையான கட்டிடம்
ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.
வேலை ஆள்கள்
இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.
மூலப்பொருட்கள்
நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம்.
சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும்.
காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.
தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.
இயந்திரங்கள்
எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.
தயாரிப்பு முறை
தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள்.
பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது.
இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.